வெள்ளமலை குகைக்கால்வாயில் சீறிப்பாய்ந்து பெருக்கெடுக்கும் வெள்ளம்

*பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்த சுற்றுலா ஆர்வலர்கள் கோரிக்கை

வால்பாறை : சின்னக்கல்லார் நீர்வரத்து அதிகரித்து, வெள்ளமலை குகைக்கால்வாயில் வெள்ளம் பெருக்கெடுத்து சீறிப்பாயும் நிலையில் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்த சுற்றுலா ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வால்பாறை அருகே உள்ள வெள்ளமலை மலை குகை கால்வாயின் (டனல்) வெளியேறும் பகுதியில், பொதுப்பணித்துறை நீர்வளத்துறை சார்பில் ரூ.5.30 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட புனரமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், சின்னக்கல்லாரில் நீர்வரத்து அதிகரித்ததையடுத்து டனல் வழியாக வெள்ளம் சீறிப்பாயும் காட்சி சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.

ஆழியார் – நீராறு நீர்ப்பாசன திட்டத்தின் முக்கிய அங்கமாக விளங்கும் இந்த மலை குகை கால்வாய் வழியாக, சின்னக்கல்லார் அணையில் சேமிக்கப்படும் நீர் வெள்ளமலை வழியாக மாற்றி அனுப்பப்படுகிறது. மலைக்குள் குகை வடிவில் அமைக்கப்பட்டுள்ள இந்த நீர்வழி, தமிழகத்தின் முக்கிய நீர்ப்பாசனப் பொறியியல் சாதனைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

இந்தியாவில் அதிக மழை பெறும் பகுதிகளில் ஒன்றான சின்னக்கல்லாரில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக, மலை குகை கால்வாயிலிருந்து வெளியேறும் நீர் வெள்ளப்பெருக்கு போல் சீறிப்பாய்ந்து கூழாங்கல் ஆற்றில் கலக்கிறது. இதன் எதிரொலியாக தமிழ்நாடு சோலையாறு அணைக்கும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 165 அடி முழு கொள்ளளவு கொண்ட சோலையாறு அணையில், நேற்று முன்தினம் 76 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 92 அடியாக உயர்ந்து ஒரே நாளில் சுமார் 15 அடி உயர்வு பதிவாகியுள்ளது.

அணையில் தற்போது 2,336 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. அணைக்கு வினாடிக்கு 3,500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், மின் உற்பத்தி மற்றும் பைபாஸ் வழியாக வினாடிக்கு 1,152 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நேற்று காலை பதிவான மழையளவு (மி.மீ.): சின்கோனா 26, சின்னக்கல்லார் 34, பி.ஏ.பி. முகாம் 26, தாலுகா அலுவலகம் 24, சோலையாறு 26 மிமீ பதிவானது.

ஆடி 18-ஐ முன்னிட்டு வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ள நிலையில், வெள்ளமலை டனல் பகுதியில் ஆர்ப்பரித்து பாயும் நீரின் காட்சியை காண தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகளுக்கு தற்போது எந்தத் தடையும் இல்லாததால், பாதுகாப்பான இடங்களில் நின்று இயற்கைக் காட்சியை ரசித்து புகைப்படங்களும், காணொளிகளும் பதிவு செய்து வருகின்றனர்.

எனினும், நீரின் வேகம் அதிகமாக இருப்பதாலும், பாறைகள் வழுக்கும் தன்மை கொண்டிருப்பதாலும், எதிர்பாராத விபத்துகளைத் தவிர்க்க நிரந்தர இரும்பு தடுப்புகள், பாதுகாப்பு கம்பிகள், எச்சரிக்கை பலகைகள், கண்காணிப்பு கேமராக்கள், பார்வையாளர் மேடை, வாகன நிறுத்துமிடம் மற்றும் பாதுகாப்பு பணியாளர்கள் உள்ளிட்ட வசதிகளை மேலும் மேம்படுத்த வேண்டும் என்று பொதுமக்களும் சுற்றுலா ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், சின்னக்கல்லார்வெள்ளமலை நீர்மாற்றுத் திட்டத்தின் வரலாறு, மலைக்குகை கால்வாயின் பொறியியல் சிறப்பு மற்றும் ஆழியார் – நீராறு நீர்ப்பாசனத் திட்டத்தின் முக்கியத்துவத்தை விளக்கும் தகவல் மையம் அமைக்கப்பட்டால், இந்த இடம் வால்பாறையின் முக்கிய சுற்றுலா ஈர்ப்பு மையங்களில் ஒன்றாக மேலும் வளர்ச்சியடைவதுடன், பாதுகாப்பான சுற்றுலாவையும் ஊக்குவிக்கும் என சுற்றுலா ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: