வினாத்தாள் கசிவு விவகாரத்தை கையாண்டதில் ஒன்றிய அரசு மீது பாஜகவின் ஆதரவாளர்கள் 5ல் 2 பேர் அதிருப்தி: சி-வோட்டர் நடத்திய கருத்துக் கணிப்பில் பரபரப்பு தகவல்

புதுடெல்லி: வினாத்தாள் கசிவு பிரச்னையை ஒன்றிய அரசு கையாண்ட விதம் குறித்து நடத்தப்பட்ட ‘சி-வோட்டர்’ கருத்துக் கணிப்பில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. நீட் தேர்வு வினாத்தாள் கசிவு பிரச்னையைத் தொடர்ந்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தலைமையில் நடந்த போராட்டங்கள் தீவிரமடைந்ததால், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யும் சூழல் உருவானது. இதனைத் தொடர்ந்து, வினாத்தாள் கசிவு வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்களை அறிவித்த ஒன்றிய அரசு, பொதுத் தேர்வுகள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து கடும் தண்டனைகளை உறுதி செய்தது.

இந்நிலையில்தான், இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசின் செயல்பாடுகள் குறித்து ‘சி-வோட்டர்’ நிறுவனம் அவசர கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியது. அதில், பாஜக தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வாக்காளர்களில் 5 பேரில் 2 பேர், அதாவது பெருமளவிலான வாக்காளர்கள் பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசின் நடவடிக்கைகளில் திருப்தியடையவில்லை என்று தெரிவித்துள்ளனர்.மேலும், போராட்டத்தின் போது போலீசார் நடத்திய அத்துமீறல்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பாஜக கூட்டணியின் ஆதரவாளர்களில் 58 சதவீதம் பேர் வலியுறுத்தியுள்ளனர். அதுமட்டுமின்றி, எதிர்காலத்தில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நடத்தும் போராட்டங்களுக்கு சுமார் 38 சதவீதம் கூட்டணி வாக்காளர்கள் ஆதரவு அளிப்போம் என்றும் கூறியுள்ளனர்.

வினாத்தாள் கசிவு தொடர்பாக நாடாளுமன்றத்தில் நடந்த விவாதங்களில் 35 சதவீதம் பேர் மட்டுமே திருப்தி அடைந்துள்ளதாகவும், 39 சதவீதம் பேர் அதிருப்தி தெரிவித்துள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. போராட்டங்களில் ஈடுபட்ட மாணவர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என்று 35.5 சதவீதம் பேரும், அமைதியான முறையில் போராடியவர்கள் மீதான வழக்குகளை மட்டும் திரும்பப் பெறலாம் என்று 25 சதவீதத்திற்கு குறைவானவர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த ஆய்வறிக்கை குறித்து ‘சி-வோட்டர்’ அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வினாத்தாள் கசிவு மற்றும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டங்கள் பாஜக கூட்டணி அரசுக்கு அரசியல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. இளைஞர்கள் மத்தியில் ராகுல் காந்தியின் செல்வாக்கு உயர்ந்து வந்தாலும், ஒட்டுமொத்த ஆதரவில் மோடியே முன்னணியில் உள்ளார். இருப்பினும் இளைஞர்கள் மத்தியில் நிலவும் எதிர்ப்பு உணர்வு தீவிரமான பிரச்னையாக உருவெடுத்துள்ளது’ என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Stories: