டெல்லி: நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தை தொடர்ந்து, தேசிய தேர்வு முகமை (NTA) புதிய டெண்டர் ஒன்றை கோரியுள்ளது. மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் போராட்டத்தை தூண்டி ஒன்றிய கல்வி அமைச்சராக இருந்த பிரதான் ராஜினாமா செய்யுமளவிற்கு சென்ற நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தைத் தொடர்ந்து தனது பாதுகாப்பு கட்டமைப்பை பலப்படுத்துவதற்காக ரூ.7.5 கோடி மதிப்பிலான புதிய பாதுகாப்பு டெண்டரை NTA வெளியிட்டுள்ளது
தனது தலைமை அலுவலகம் மற்றும் வட்டார அலுவலகங்களுக்கு 24 மணி நேரப் பாதுகாப்பு வழங்க ரூ.7.5 கோடியில் NTA, புதிய டெண்டர் கோரியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பில் தகுதி மற்றும் நவீன தொழில்நுட்ப வசதி கொண்ட நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பயோமெட்ரிக் வருகைப்பதிவு, GPS அடிப்படையிலான ரோந்து கண்காணிப்பு, மெட்டல் டிடெக்டர்கள் உள்ளிட்ட நவீன தொழில் நுட்பங்களுடன் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என NTA குறிப்பிட்டு உள்ளது.
இந்த பாதுகாப்பு ஒப்பந்தம் தொடக்கத்தில் 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படும் என்றும் செயல்திறன் அடிப்படையில் மேலும் 2 ஆண்டுகள் நீட்டிக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது. தகுதியுடைய நிறுவனங்கள் ஆகஸ்ட் 17, 2026 அன்று மதியம் 3 மணி வரை தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். அன்றைய தினமே தொழில்நுட்ப ரீதியான ஏல விண்ணப்பங்கள் திறக்கப்படும் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. ந்த டெண்டரை தவிர, தேர்வுக்கான ஹை-செக்யூரிட்டி பிரிண்டிங் சர்விஸ் மற்றும் ஹவுஸ்கீப்பிங் என தனித்தனியே புதிய டெண்டர்களையும் NTA வெளியிட்டுள்ளது.
