சென்னை: கொளத்தூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட 14 வாக்குச்சாவடிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்தது. இதையடுத்து இவிஎம் எந்திரங்கள் ஆய்வு செய்யும் பணி கடந்த 29 ஆம் தேதி முதல் நடந்து வருகிறது.
மாநகராட்சி ஆணையர் சமீரன் முன்னிலையில் இவிஎம் இயந்திரங்கள் திறக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர் இளங்கோ உள்ளிட்டோரும் தவெக சார்பில் விஎஸ் பாபுவின் பிரதிநிதிகள், வழக்கறிஞர்கள் பங்கேற்று இருந்தனர்.
ஒரு நாளைக்கு 2 வாக்குச்சாவடிகள் வீதம் மொத்தம் 14 வாக்குச்சாவடிகளுக்கு 7 நாட்களாக இந்த வாக்குந்திரங்கள் சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இன்று 4வது நாளாக வாக்கு எந்திரங்கள் சரிபார்க்கும் பணி நடந்தது.
இந்நிலையில் திமுக மூத்த வழக்கறிஞர் என்.ஆர் இளங்கோ கொளத்தூர் தொகுதியில் தேர்தல் முறையாக நடைபெறவில்லை என கூறியுள்ளார். மேலும் இதுவரை ஆய்வு செய்த 8 எந்திரங்களில் 3 எந்திரங்கள் சரியாக இல்லை. காஞ்சிபுரம் தொகுதியில் ஒரு வாக்கு இயந்திரத்தில் பழுதும் கொளத்தூர் தொகுதியில் 2 விவிபாட் மிஷின்களில் பழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியாக பாதுகாக்கப்படவில்லை. வாக்குப்பதிவு இயந்திரங்களில் முகவரி அட்டை புதிதாக உள்ளதாகவும், கொளத்தூர் தொகுதியில் மின்னணு வாக்கு இயந்திரங்களில் எண்கள் மாறியுள்ளன என்று அவர் குற்றச்சாட்டியுள்ளார். இந்த குளறுபடி தொடர்பாக 19 கேள்விகளை எழுப்பி தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக என்.ஆர்.இளங்கோ கூறியுள்ளார்.
30 சதவீத வாக்குப்பதிவு இயந்திரங்களில் பிரச்சனைகள் உள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது. வாக்குப்பதிவு இயந்திரத்தை சீல் வைத்ததில் குளறுபடி நடந்துள்ளது இது தொடர்பாக மு.க ஸ்டாலினின் அறிவுரைப்படி நீதிமன்றத்தை நாடுவோம் என்று என்.ஆர்.இளங்கோ தெரிவித்துள்ளார்.
