விழுப்புரம், ஆக. 1: விழுப்புரம் அருகே தம்பியின் தற்கொலைக்கு நீதான் காரணம் என்றுகூறி வீடுபுகுந்து பெண்மீது சரமாரி தாக்குதல் நடத்திய 13 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விழுப்புரம் அருகே ராகவன்பேட்டை பகுதியை சேர்ந்த திருமணமான 33 வயது பெண்ணுக்கும், அதே பகுதியை சேர்ந்த கலைச்செல்வன் என்பவருக்கும் பழக்கம் இருந்துவந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 13ம்தேதி கலைச்செல்வன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனால் அவரது சகோதரிகள் கலைவாணி, கலைசெல்வி மற்றும் உறவினர்கள் லதா, நதியா, பூரணி, கலா, வேல்விழி, முத்து, ஏழுமலை, முருகன் மற்றும் 3 நபர்கள் உள்ளிட்ட 13 பேரும் அந்த பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவரை திட்டி தாக்கியுள்ளனர். மேலும் ஜன்னலை உடைத்தும் சேதப்படுத்தி மிரட்டியுள்ளனர்.
இதனால் அந்தபெண் வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். தொடர்ந்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
