திருவோணம் அருகே ஒரு வீட்டில் நடந்த திடீர் தீ விபத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது: 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்

தஞ்சை: தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு போலீஸ்உட்கோட்டத்திற்குட்பட்ட திருவோணம் காவல் சரகம் சின்னஅம்மன்குடி லெட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி முருகையன் (51). இவரது மனைவி செல்வி (41). இவர்களது மகள் அபிநயா. முருகையன் வீட்டின் கீற்றுக் கொட்டைகையில் நேற்று நள்ளிரவு திடீரென தீப்பிடித்து எரிந்தது. அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு தீயை அணைக்க போராடினர்.

இந்நிலையில் தீப்பிடித்து எரிந்த கீற்றுக்கொட்டைகையில் சமையலுக்காக வைக்கப்பட்டிருந்த சிலிண்டர் வெடித்துச் சிதறியது. இதில் முருகையன் மனைவி செல்வி (41) மகள் அபிநயா (15) மற்றும் தீயை அணைக்க முயன்ற அப்பகுதியைச் சேர்ந்தோர் உள்பட 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதில் 11ஆம் வகுப்பு படிக்கும் புவனேஷ் (15), செல்வராஜ் (70) ஆகிய இருவரும் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 9க்கும் மேற்பட்டோர் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் டி.ஐ.ஜி ஜியாஉல்ஹக், தஞ்சை எஸ்.பி சுந்தரவதனம் ஆகியோர் இன்று சம்பவம் நடந்த சின்னஅம்மன்குடிலெட்சுமிபுரம் பகுதியையும், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள புவனேஷ் மற்றும் செல்வராஜ் ஆகியோரையும் நேரில் பார்வையிட்டனர். மேலும் இது குறித்து அங்கிருந்த அவர்களது உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து பணியிலிருந்த செவிலியர்களிடம் விபரம் கேட்டறிந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: