கொள்முதல் நிலையங்களில் 7 லட்சம் நெல் மூட்டைகள் தேக்கம்: விரைந்து நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேக்கமடைந்துள்ள சுமார் 7 லட்சம் நெல் மூட்டைகளை லாரிகள் மூலம் கிடங்குகளுக்கு உடனடியாக எடுத்துச் செல்ல வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு சுமார் 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கோடை குருவை சாகுபடியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தற்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அறுவடைப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

விவசாயிகளிடமிருந்து நெல் மூட்டைகளை கொள்முதல் செய்வதற்காக மாவட்டம் முழுவதும் 167 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, கொள்முதல் பணிகள் நடைபெற்று வருகின்றன.

திருவாரூர் மாவட்டத்தின் நன்னிலம், குடவாசல், வலங்கைமான், மன்னார்குடி, கோட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அறுவடைப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல் மூட்டைகளை அருகிலுள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் லாரிகள் மூலம் கிடங்குகளுக்கு எடுத்துச் செல்லப்படாததால், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சுமார் 7 லட்சம் நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

குறிப்பாக மன்னார்குடி, வலங்கைமான், நீடாமங்கலம், குடவாசல், நன்னிலம் உள்ளிட்ட பகுதிகளில் நெல் மூட்டைகளின் தேக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்படாமல் நீண்ட நாட்களாக கொள்முதல் நிலையங்களிலேயே இருப்பு வைக்கப்பட்டுள்ளதால், புதிதாக அறுவடை செய்து கொண்டு வரும் விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

மேலும், தற்போது திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திடீர் மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதால், விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ள நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடையும் அபாயம் நிலவுவதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே, தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் உடனடி நடவடிக்கை எடுத்து, தேக்கமடைந்துள்ள நெல் மூட்டைகளை லாரிகள் மூலம் விரைந்து கிடங்குகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். மேலும், புதிதாக கொண்டு வரப்படும் நெல்லையும் தடையின்றி கொள்முதல் செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: