டெல்லி: அரசாங்கத்தில் பணிபுரியும் ஒரு அதிகாரிக்கு ஒரு அரசு கார் மட்டுமே ஒதுக்கப்பட வேண்டும் என்ற புதிய ‘ஒரு அதிகாரி, ஒரு அரசு கார் கொள்கையை ஒன்றிய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. ஒன்றிய நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் செலவினத் துறை இதற்கான புதிய சுற்றறிக்கையை அனைத்து அமைச்சகங்களுக்கும் அரசுத் துறைகளுக்கும் அனுப்பியுள்ளது.
அரசு வாகனங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கவும், தேவையற்ற பொதுச் செலவினங்களைக் குறைக்கவும் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு அனுப்பப்பட்ட ஓர் அதிகாரப்பூர்வ சுற்றறிக்கையில்; வாகனப் பயன்பாட்டை மேம்படுத்தவும் அரசு வாகனங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கவும் கண்டிப்பான இணக்கத்தை வலியுறுத்தியுள்ளது. இந்தச் சுற்றறிக்கையை அதிகாரிகள் ‘ஒரு அதிகாரிக்கு ஒரு அதிகாரப்பூர்வ கார்’ என்று குறிப்பிட்டனர்.
புதிய விதிமுறைகளின்படி வெளியான அரசாணையில், ஏற்கனவே அரசுப் பணியாளர் வாகனத்திற்கு உரிமை பெற்ற ஒரு அதிகாரிக்கு, வேறொரு அமைச்சகம், துறை, பொதுத்துறை நிறுவனம் அல்லது தன்னாட்சி அமைப்பின் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்ட காரணத்தால் மட்டும் மற்றொரு அரசு வாகனம் ஒதுக்கப்பட முடியாது. மாறாக, அந்த அதிகாரி தமக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்ட பணியாளர் வாகனத்தையே தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்.
அலுவலக பணி நிமித்தமாகவோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட சுற்றுப்பயணங்களின்போதோ தவிர, பொதுத்துறை நிறுவனங்கள், தன்னாட்சி அமைப்புகள் அல்லது அரசு சார்ந்த அமைப்புகளுக்குச் சொந்தமான வாகனங்களை மத்திய அரசு அதிகாரிகள் பயன்படுத்துவதையும் இந்த குறிப்பாணை தடை செய்கிறது.
இந்த உத்தரவானது, ஒன்றிய அரசு முழுவதும் உள்ள அலுவலக வாகனங்களின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் விதிகளை ஒருங்கிணைத்து, செப்டம்பர் 2022-ல் முதன்முதலில் வெளியிடப்பட்ட விரிவான அறிவுறுத்தல்களை வலுப்படுத்துகிறது.
