இ20 எத்தனால் கலப்பு திட்டத்தில் ஊழல்; ரூ.11 கோடி நஷ்டஈடு கேட்டு ஒன்றிய பாஜக அமைச்சர் வழக்கு: போலி ஏஐ வீடியோக்களை நீக்கக்கோரி மனு

மும்பை: இ20 எத்தனால் கலப்பு திட்டத்தில் ஊழல் செய்ததாக ஏஐ தொழில்நுட்ப போலி வீடியோக்கள் பரப்பப்பட்ட விவகாரத்தில், 11 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடந்துள்ளார். ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, தனது பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் உருவாக்கப்பட்ட போலி வீடியோக்கள் மற்றும் தவறான தகவல்களைப் பரப்புவோருக்கு எதிராக மும்பை உயர் நீதிமன்றத்தில் 86 பக்கங்கள் கொண்ட அவதூறு வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.

ஒன்றிய அரசின் இ20 எத்தனால் கலப்புத் திட்டத்தில் அவரும் அவரது குடும்பத்தினரும் முறைகேடு செய்து நிதி ஆதாயம் அடைந்ததாகப் பரப்பப்படும் வதந்திகளுக்கு 11 கோடி ரூபாய் நஷ்டஈடு கோரியுள்ளார். எத்தனால் கலப்புத் திட்டம் என்பது பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கீழ் இயங்குவதாகவும், கடந்த 2003ம் ஆண்டு கொள்கையின்படி 2025-26ம் ஆண்டிற்குள் 20 சதவீதம் எத்தனால் கலக்கும் இலக்கை அடைய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இதில் தனது அமைச்சகத்திற்கு எவ்வித தொடர்பும் இல்லை என்றும் கட்கரி சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் தனது குரல், முகம் மற்றும் உடல்மொழியை அனுமதியின்றி அத்துமீறிப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட 26 இணையதள இணைப்புகளை உடனடியாக நீக்க வேண்டும் எனத் தனது மனுவில் வலியுறுத்தியுள்ளார்.

இந்த வழக்கில் மெட்டா (ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம்), எக்ஸ், கூகுள், யூடியூப் மற்றும் ஒன்றிய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், தொலைத்தொடர்புத் துறை ஆகியவை எதிர்மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளன. நியாயமான அரசியல் விமர்சனங்களை அல்லது கேலிகளைத் தான் தடுக்க விரும்பவில்லை என்றும், ஆனால் முற்றிலும் பொய்யான மற்றும் வசைபாடும் வகையில் உருவாக்கப்பட்ட டிஜிட்டல் உள்ளடக்கங்கள் தனது தனிப்பட்ட உரிமைகளைப் பாதிப்பதாகவும் கட்கரி தெரிவித்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி ஆரிஃப் எஸ். டாக்டர் அமர்வு முன்பாக விசாரணைக்கு வரவுள்ளது.

Related Stories: