உடுமலை சந்தை ரோட்டில் மலை போல குவிந்த சாக்கடைக் கழிவுகள்

உடுமலை : உடுமலை சந்தை ரோட்டில் சாக்கடைக் கால்வாய்கள் சுத்தம் செய்யும் பணியின் போது கழிவுகள் சாலை ஓரத்தில் மலை போல குவிக்கப்பட்டதால் வியாபாரிகள் அதிருப்தி அடைந்தனர்.

உடுமலை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பாதாளச் சாக்கடை திட்டம் செயல்பாட்டுக்கு வந்த பிறகு, சாக்கடைக் கால்வாய்கள் மழைநீர் வடிகால்களாக பயன்பாட்டில் உள்ளன.ஆனால் அவற்றை தூர் வாருவதில் தொடர்ந்து அலட்சியம் காட்டப்பட்டு வருவதால், மழைக்காலங்களில் பெரும்பாலான சாலைகள் வெள்ளக்காடாக மாறும் நிலை உள்ளது.

இந்த நிலையில் உடுமலை பஸ் நிலையத்தில் இருந்து ரயில் நிலையம், உழவர் சந்தை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் முக்கிய வழித்தடமாக உள்ள ராஜேந்திரா சாலையோரத்தில் உள்ள சாக்கடைக் கால்வாய்கள் பல மாதங்களாக தூர்வாரப்படாமல் உள்ளன.

இதனால் கால்வாய்களில் பிளாஸ்டிக் கழிவுகள், பாட்டில்கள், குப்பைகள் மற்றும் கழிவு நீர் தேங்கி நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மீன் மற்றும் இறைச்சிக் கழிவுகள் சாக்கடைக் கால்வாய்க்குள் கொட்டப்படுவதால் இந்தப் பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசியது.

இந்த சாக்கடையை தூர்வாரும் பணியில் நேற்று நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டது. பொக்லைன் எந்திரங்கள் உதவியுடன் சாக்கடைக் கால்வாயில் உள்ள மண் மற்றும் கழிவுகள் அகற்றப்பட்டு சாலையோரத்தில் மலை போல குவித்து வைக்கப்பட்டது.

இதனால் வியாபாரம் செய்ய முடியாத நிலையில் வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டார்கள். குறிப்பாக காய்கறி மற்றும் மீன் வியாபாரிகள் பொருட்களை கொள்முதல் செய்த நிலையில், திடீரென்று சாக்கடைக் கால்வாய்கள் தூர்வாரப்பட்டதால் அவற்றை விற்பனை செய்ய முடியாமல் வீணானது.

இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்தனர். மேலும் கழிவுகள் சாலை ஓரத்தில் குவிந்து கிடந்ததால் அந்தப் பகுதி முழுவதும் ஏற்பட்ட துர்நாற்றத்தால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர்.எனவே கழிவுகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வரும் காலங்களில் சாக்கடைக் கால்வாய்களை குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ச்சியாக தூர்வார வேண்டும்.மேலும் வாரச்சந்தை வளாகத்துக்கு செல்லும் நுழைவாயில் பகுதியில் சாக்கடைக் கால்வாய்கள் மிகவும் குறுகலாக உள்ளதால் மழை நீர் மற்றும் கழிவு நீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படுகிறது. இதுவே இந்தப் பகுதியில் அதிக அளவில் கழிவுகள் தேங்குவதற்குக் காரணமாக அமைகிறது என்று வியாபாரிகள் குற்றம் சாட்டினர்.

Related Stories: