பெருங்குடி குப்பைக் கிடங்கிலிருந்து வெளியேறும் நச்சுக்கழிவு நீர்: பள்ளிக்கரணை சதுப்புநிலம் கடும் பாதிப்பு

சென்னையின் பெருங்குடி குப்பைக் கிடங்கிலிருந்து வெளியேறும் நச்சுக்கழிவு நீர் பள்ளிக்கரணை சதுப்புநிலத்தில் கலப்பதால், அதன் இயற்கைச் சூழலும் நிலத்தடி நீரும் கடுமையாக பாதிக்கப்படுவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

சென்னையில் தினமும் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் பள்ளிக்கரணை அருகே உள்ள பெருங்குடி குப்பைக் கிடங்கில் கொட்டப்படுகின்றன. இவ்வாறு கொட்டப்படும் குப்பைகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் முறையாக சுத்திகரிக்கப்படாமல் பள்ளிக்கரணை சதுப்புநிலப் பகுதிக்குள் கலப்பதால், அந்தப் பகுதியின் சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

இயற்கை வளம் நிறைந்த பள்ளிக்கரணை சதுப்புநிலம் 200-க்கும் மேற்பட்ட பறவை இனங்களும், பல அரிய உயிரினங்களும் வாழும் முக்கியமான வாழ்விடமாக உள்ளது. ஆனால், குப்பைக் கழிவுகளால் ஏற்படும் மாசுபாட்டின் காரணமாக வாழ்விடங்கள் சுருங்குவதோடு, உயிரியல் பன்முகத்தன்மையும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.

மேலும், குப்பைகள் சிதைவடைவதால் மீத்தேன் உள்ளிட்ட நச்சு வாயுக்கள் வெளியேறுகின்றன. அவ்வப்போது தீ விபத்துகள் ஏற்படும் போது நச்சுப் புகை பரவி, சுற்றுப்புற மக்களின் உடல்நலத்திற்கும் கடுமையான ஆபத்து ஏற்படுகிறது.

பள்ளிக்கரணை சதுப்புநிலம் இயற்கையாகவே வெள்ளநீரை சேமிக்கும் முக்கியமான ஈரநிலப் பகுதியாகக் கருதப்படுகிறது. அதன் பரப்பளவு தொடர்ந்து குறைந்து வருவதால், குறிப்பாக தென் சென்னை பகுதிகளில் வெள்ள அபாயம் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

இதனுடன், தொடர்ச்சியாக குப்பைகள் கொட்டப்படுவதும், ஆக்கிரமிப்புகள் அதிகரிப்பதும் பள்ளிக்கரணை சதுப்புநிலத்தின் பெரும்பகுதியை அழித்துவிட்டதாக சமூக ஆர்வலர்களும், இயற்கை ஆர்வலர்களும் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே, பெருங்குடி குப்பைக் கிடங்கில் சேகரிக்கப்படும் குப்பைகளை உடனுக்குடன் மறுசுழற்சி செய்து, நச்சுக்கழிவு நீர் சதுப்புநிலத்திற்குள் கலப்பதைத் தடுக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை பாதுகாத்து இயற்கை வளத்தை காக்க வேண்டும் என்றும் கோரிக்கை வலுத்து வருகிறது.

Related Stories: