தொடர்ச்சியாக கழிவுநீர் கலப்பதால் சுகாதார கேடு; பாசி படர்ந்து காணப்படும் முட்டுக்காடு முகத்துவாரம்: மீன்கள், மரக்கன்றுகளுக்கு ஆபத்து; சுற்றுலா பயணிகள் அவதி

 

திருப்போரூர்: தொடர்ந்து கழிவுநீர் கலப்பதால் முட்டுக்காடு முகத்துவாரம் பாசி படர்ந்த நிலையில் காட்சியளிக்கிறது. இதனால், மீன்கள் மற்றும் அலையாத்தி காடுகளுக்காக வளர்க்கப்படும் மரக்கன்றுகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் கழிவுநீரில் இருந்து துர்நாற்றம் வீசி சுகாதார கேடு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மரக்காணத்தில் இருந்து ஆந்திர மாநிலம் விஜயவாடா வரை ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் பக்கிங்காம் கால்வாய் தோண்டப்பட்டது. மிக நீண்ட நீர்வழி போக்குவரத்தாக விளங்கிய இந்த திட்டம் காலப்போக்கதில் வாகனப் போக்குவரத்து ரயில், விமான போக்குவரத்து ஆகியவற்றின் வருகையால் பயன்படுத்தப்படாமல் போனது. ஒரு காலத்தில் படகுப் போக்குவரத்து நடைபெற்ற இந்த பக்கிங்காம் கால்வாய் தற்போது பெரும்பாலான இடங்களில் தூர்ந்து போய்விட்டது.

சென்னை அருகே கோவளம் மற்றும் முட்டுக்காடு ஆகிய இடங்களில் இயற்கையாக உருவாகி உள்ள முகத்துவாரம் வழியாகத்தான் பக்கிங்காம் கால்வாய் செல்கிறது. ஜி.எஸ்.டி. சாலை, ஓ.எம்.ஆர். சாலை ஆகிய இடங்களில் உள்ள ஏரிகளில் இருந்து மழைக் காலங்களில் வெளியேறும் உபரிநீர் பல இடங்களில் பக்கிங்காம் கால்வாயில் சென்று சேர்ந்து பின்னர் அவை முகத்துவாரம் வழியாக கடலை சென்று அடைகிறது. இந்நிலையில் ஓ.எம்.ஆர். சாலையில் தொடர்ச்சியான நகரமயமாக்கலின் காரணமாக ஏராளமான வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், தனியார் தங்கும் விடுதிகள் உருவாகி அதன் மூலம் மக்கள் தொகையும் கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால் இந்த கட்டிடங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர், லாரிகள் மூலம் நாவலூர், ஏகாட்டூர், கழிப்பட்டூர், படூர், கேளம்பாக்கம், தையூர், திருப்போரூர் ஆகிய இடங்களில் செல்லும் பக்கிங்காம் கால்வாயில் விடப்படுகிறது.

பல்வேறு கழிப்பறைகள், குளியலறைகளில் இருந்து வெளியேற்றப்படும் இந்த கழிவுநீர் இதுபோன்ற இயற்கையான கால்வாயில் விடப்படுவதால் நீரின் தன்மை மாறுபட்டு கடந்த சில நாட்களாக பச்சை நிற பாசி படர்ந்து காணப்படுகிறது. முட்டுக்காடு படகுத்துறையில் இருந்து இயக்கப்படும் படகுகளில் பயணிக்கும் சுற்றுலாப் பயணிகள் மூக்கைப் பிடித்துக்கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்த அளவிற்கு ஓ.எம்.ஆர். சாலையின் கழிவுநீர் பக்கிங்காம் கால்வாயில் கலக்கப்பட்டு உப்புநீர் கழிவுநீராக மாறி விட்டது என இயற்கை ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதன் காரணமாக வனத்துறை சார்பில் பக்கிங்காம் கால்வாயை ஒட்டி மாங்குரோவ் எனப்படும் அலையாத்தி காடுகளை உருவாக்கும் வகையில் அவிசினியா, சைசோபோரா ஆகிய மரக்கன்றுகள் வளர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. மேலும், இந்த தண்ணீரில் குஞ்சு பொரிக்கும் இறால்கள், சிறு மீன்கள் ஆகியவற்றின் இனப்பெருக்கமும் தடைபடும் ஆபத்து உள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் சட்ட விரோதமாக பக்கிங்காம் கால்வாயிலும், முட்டுக்காடு, கோவளம் ஆகிய இடங்களில் உள்ள முகத்துவார பகுதிகளிலும் லாரிகள் மூலம் கொண்டு வந்து விடப்படும் கழிவுநீரை தடுத்து, கழிவுநீரை விடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: