அமெரிக்காவின் சியாட்டில் நகரில் துப்பாக்கிச் சூடு: 2 பேர் உயிரிழப்பு, 5 பேர் காயம்! 

வாஷிங்டன்: அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள சியாட்டில் நகரில் நடைபெற்ற உணவுத் திருவிழாவில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர் மற்றும் 2 வயது குழந்தை உட்பட 5 பேர் காயமடைந்தனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அமெரிக்க நேரப்படி ஞாயிற்றுக்கிழமை மாலை பிரபலமான ஸ்பேஸ் நீடில் (Space Needle) கோபுரத்துக்கு அருகிலிருக்கும் சியாட்டில் மையம் (Seattle Center) பகுதியில் நடைபெற்றுக் கொண்டிருந்த ‘பைட் ஆஃப் சியாட்டில்’ (Bite of Seattle) உணவுத் திருவிழாவில் இந்தத் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.

இங்கு பல ஆண்டு காலமாக மூன்று நாள்கள் நடைபெறும் உணவுத் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பல லட்சம் பேர் பங்கேற்கும் இவ்விழாவில், உணவு, குளிர்பானம், சமுதாய நிகழ்ச்சிகள் பலவும் நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு ஏராளமானோர் உணவுத் திருவிழாவில் கூடியிருந்தபோது இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. தகவல் அறிந்ததும் விரைந்து வந்த காவல்துறையினர், உடல்களைக் கைப்பற்றி உடல் கூராய்வுக்கு அனுப்பியுள்ளனர்.

பலர் தங்களைக் காப்பாற்றிக்கொள்ளச் சம்பவ இடத்திலிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு ஓடியதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்தன. புகழ்பெற்ற உணவுத் திருவிழாவில் திடீரென நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம், அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்களை மரண பீதியில் ஆழ்த்தியுள்ளது.

Related Stories: