- அயோதி ராமர் கோயில்
- உட்கார
- உச்ச நீதிமன்றம்
- அயோத்தி
- ராமர் கோயில்
- உத்திரப்பிரதேசம்
- சிறப்பு விசாரணை குழு
அயோத்தி: உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள ராமர் கோயில் காணிக்கைப் பணத்தில் முறைகேடு மற்றும் திருட்டு நடந்ததாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக ஏற்கனவே அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக்குழு (எஸ்ஐடி), சிசிடிவி காட்சிகள், நன்கொடை பதிவேடுகள் மற்றும் நிதிப் பதிவேடுகளை தீவிரமாக ஆய்வு செய்தது. இதில் கோயில் ஊழியர்கள் பலரிடம் விசாரணை நடத்தப்பட்டு, முறைகேட்டில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து ரொக்கப் பணம், வாகனங்கள் மற்றும் சொத்து ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த வழக்கின் விசாரணையை ஆய்வு செய்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யா காந்த், நீதிபதிகள் ஜோய்மால்யா பாக்சி மற்றும் வி.மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, குற்றவியல் வழக்குகளை அனுபவமிக்க காவல் துறை அதிகாரிகளே சிறப்பாக விசாரிக்க முடியும் என்று கருத்து தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து கடந்த 13ம் தேதி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, உத்தரபிரதேச அரசு 3 மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய புதிய சிறப்பு விசாரணைக்குழுவை அமைத்துள்ளது. இந்த புதிய குழுவிற்கு ஐஜி கிரண் தலைமை தாங்குகிறார்.
அயோத்தி டிஐஜி சோமென் வர்மா மற்றும் அயோத்தி எஸ்எஸ்பி டாக்டர் கௌரவ் குரோவர் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே இருந்த லக்னோ ஆணையர் விஜய் விஸ்வாஸ் பந்த் மற்றும் நிதித்துறை சிறப்பு செயலாளர் நீல் ரத்தன் குமார் ஆகியோருக்குப் பதிலாக இக்குழு மாற்றப்பட்டுள்ளது. புதிய ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையிலான குழு தனது விசாரணையை உடனடியாகத் தொடங்கியுள்ளது. இந்த வழக்கின் தற்போதைய விசாரணை நிலை குறித்த அறிக்கையை வரும் 27ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
