புதுடெல்லி: தேசிய தகுதிக்கான நுழைவு தேர்வில் வினாத்தாள் கசிவு, தொழில்நுட்பக் கோளாறுகள், ஹால் டிக்கெட் பதிவிறக்கச் சிக்கல்கள் மற்றும் மறுதேர்வுகளில் ஏற்பட்ட இயற்பியல் வினாத்தாள் குழப்பங்கள் போன்ற தொடர் குளறுபடிகள் மாணவர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இதனால் மாணவர்களின் மன அழுத்தம் அதிகரித்து நாடு முழுவதும் கண்டன போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதுபோன்ற நிலையில் தேசிய தேர்வு முகமை நடத்தும் நீட் தேர்வு உள்பட பல தேர்வுகளில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) தரப்பில் தொடர் போராட்டம் நடத்தி வரப்படுகிறது. இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக் கடந்த ஜூன் 28ம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வந்தார்.
இதையடுத்து கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக அவர் வலுக்கட்டாயமாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுபோன்ற சூழலில் நேற்று முன்தினம் காலை நாடாளுமன்றத்தை நோக்கி அமைதி பேரணி நடத்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சியை சார்ந்தவர்கள் புறப்பட்டனர். மேலும் இந்தப் போராட்டத்தில் ஏராளமான மாணவர்கள், பெற்றோர்கள் என பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து பேரணியாக செல்ல முயன்றவர்களை முன்னதாக ஜந்தர் மந்தர் போலீசார் தடுத்து நிறுத்தினர். இருப்பினும் தடைகள் அனைத்தையும் மீறி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியை இளைஞர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி சென்று கொண்டிருந்தனர். இதனால் பதட்டமான சூழல் நிலவியது. இதைத்தொடர்ந்து பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்டு போராட்டக்காரர்கள் மீது போலீசார் அடிதடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளையும் வீசியும் போராட்டக்காரர்களை கலைத்தனர்.
மேலும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சேர்ந்தவர்களின் இந்த போராட்டத்தால் நாடாளுமன்றத்தின் வாயில் மற்றும் குடியரசுத் தலைவர் மாளிகை செல்லும் பாதை அனைத்தும் அவசர அவசரமாக இழுத்து மூடப்பட்டது. இதையடுத்து போலீசாரின் நடவடிக்கையால் மாலையில் போராட்டக்காரர்கள் கொஞ்சம் கொஞ்சமாக கலைந்து சென்றனர். இருப்பினும் போராட்டக்காரர்களில் ஆயிரத்திதிற்கும் மேற்பட்டோர் கொட்டும் மழையையும் கருத்தில் கொள்ளாமல் விடிய விடிய இரவு முழுவதும் ஜந்தர் மந்தர் பகுதியின் உள்ளே சாலையில் அமர்ந்து தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக இளைஞர்கள் சாலையியிலே படுத்து உறங்கி இருந்த காண்பவர்களை கண் கலங்க வைக்கும் விதமாக இருந்து வருகிறது. இதுகுறித்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் (சிஜேபி) தேசிய செய்தி தொடர்பாளர் அஷுதோஷ் ரங்கா நேற்று கூறியதில், ‘‘போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறையினர் மட்டுமே தடியடி நடத்தினர். எங்கள் இளைஞர்கள் தாக்கப்பட்டனர். அவர்களின் தலைகள் உடைக்கப்பட்டன. அவர்கள் தெருக்களில் இழுத்துச் செல்லப்பட்டனர்.
சோனம் வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலியை லாரியிலிருந்து வெளியே இழுப்பதற்காக அவரது தலைமுடியை பிடித்து போலீசார் இழுத்தனர். எங்கள் தொண்டர்களில் ஒருவரின் விலா எலும்புகள் உடைக்கப்பட்டது. இத்தகைய கொடூரத்தை நாங்கள் ஒருபோதும் எதிர்பார்க்கவே இல்லை. டெல்லி காவல்துறை நேற்று எல்லா வரம்புகளையும் மீறி செயல்பட்டு விட்டது. மக்களைத் தாக்குவதற்கு அவர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது என்பது இந்த விவகாரத்தில் தெளிவாக தெரிகிறது. ஆனால் நாங்கள் சும்மா விடப்போவது கிடையாது.
போராட்டத்தை கண்டிப்பாக மேலும் விரிவுபடுத்துவோம். அதிக எண்ணிக்கையிலான மக்கள் டெல்லிக்கு வருவார்கள். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யும் வரை நாங்கள் இங்கிருந்து அதாவது ஜந்தர் மந்தர் பகுதியில் இருந்து நகரவே மாட்டோம். குறிப்பாக மத்திய அரசுடனான சந்திப்பால் எங்களுக்கு எந்தவித பதிலும் கிடைக்கவில்லை.
சுமார் ஐந்து மணி நேரம் எங்களுக்கு வீணடிக்கப்பட்டது. அரசு எங்களுடன் பேச விரும்பினால், கண்டிப்பாக பேசுவோம். ஆனால் எந்தவிதத்திலும் எங்களது கோரிக்கையில் இருந்து விலக மாட்டோம். இதனை நாங்கள் சபதமாக கூறுகிறோம். குறிப்பாக போலீசாரின் தடியடியில் காயமடைந்த அனைவர்களும் இன்று(நேற்று) மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
* மீண்டும் கூடும் இளைஞர்கள்
கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக பல்வேறு இடங்களில் இருந்து சாரை சாரையாக இளைஞர்கள் வந்துள்ளனர். இருப்பினும் நேற்று நடந்தது போன்று எந்தவித அசம்பாவிதங்களும் நடந்து விடக்கூடாது என்று போலீசார் தீவிரமாக போராட்டக்காரக்களை கண்கானித்து வருகின்றனர். அதேப்போன்று நாடாளுமன்றம் செல்லும் பாதைகள் அனைத்தும் இரண்டு அடுக்கு இரும்பு தடுப்பு வேலிகள் கொண்டு மூடப்பட்டுள்ளது. மேலும் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்தும் விதமாக ஆயிரத்திற்கும் அதிகமான போலீசார் மற்றும் துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
* இந்தியாவின் கறுப்பு நாள்
இதுகுறித்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் தலைவர் அபிஜீத் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதில்,‘‘எங்களது தரப்பு இளைஞர்கள் போராட்டம் நடத்திய போது காவல்துறையின் தடியடி நடத்தினர். இதில் பலரும் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் என்பது இந்தியாவின் கறுப்பு நாள் ஆகும். குறிப்பாக மத்திய அரசுக்கு இளளைஞர்கள் மீது எந்தவித அக்கரையும் கிடையாது.
மேலும் தற்போது இருக்கும் சூழலில் இந்திய கல்வி நிர்வாகத்தில் கண்டிப்பாக சீர்த்திருத்தம் செய்ய வேண்டும். இல்லையென்றால் நீட் தேர்வில் நடப்பது போன்ற முறைகேடுகள் தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கும். இல்லையென்றால் நாளடைவில் அதனை கட்டுப்படுத்துவது என்பது சாத்தியம் இல்லாத ஒன்றாக மாறி விடும். இவ்வாறு அவர் கூறினார்.
* இது தியாகிகள் மேடை
போராட்டக்காரர்களுக்கு நேரில் சென்று ஆதரவு அளித்த மேற்கு வங்க மாநில அமைச்சர் திலீப் கோஷ் கூறும்போது,‘‘ இது வெறும் போராட்ட மேடை கிடையாது. இது ஒரு தியாகி மேடை ஆகும். இன்று ஒரு நிகழ்ச்சி இருக்கிறது. மத்திய அரசை பொருத்தமட்டில் நீங்கள் தியாகிகளுக்குத் துரோகம் செய்தீர்கள், அவர்களின் குடும்பங்களுக்குத் துரோகம் செய்தீர்கள், இப்போது பொதுமக்களுக்கும் துரோகம் செய்துள்ளீர்கள். அதனால்தான் தான் நீங்கள் தனியாக நிற்கிறீர்கள் என்று காட்டமாக தெரிவித்தார்.
* 70 இளைஞர்கள் கைது
கரப்பான் பூச்சி ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் போராட்டத்தால் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக அக்கட்சியின் இளைஞர்கள் மீது பல வழக்குகளை டெல்லி போலீசார் பதிவு செய்துள்ளது. அதாவது பேரணியின் போது ஏற்பட்ட வன்முறை மற்றும் பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தியது ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், சட்டவிதி 163-வது பிரிவின் கீழ் விதிக்கப்பட்டிருந்த தடையை மீறி ஜந்தர் மந்தரில் ஆயிரக்கணக்கான சி.ஜே.பி தொண்டர்களும், மாணவர்களும் திரண்டது சட்ட விதிகளுக்கு எதிரானதாகும் என்று காவல்துறை காரணம் தெரிவித்துள்ளது. மேலும் அதன்படி பல எப்.ஐ.ஆர்களையும் டெல்லி போலீசார் பதிவு செய்துள்ளனர்.
மேலும் சம்பவ இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் மற்றும் செய்தி அலைவரிசைகளின் வீடியோ ஆகிய ஆதாரங்களை ஆய்வு செய்து, வன்முறையில் ஈடுபட்ட முக்கிய நபர்களைக் கண்டறியும் பணியில் சிறப்புப் படையினரும் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக நேற்று நடந்த போராட்ட கலவரத்தின் அடிப்படையில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியை சேர்ந்த எழுபது இளைஞர்களை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
