புதுடெல்லி: கிரிப்டோ சொத்துக்களின் நேரடி வர்த்தகம் தொடர்பாக, அமலாக்கத்துறையின் பெங்களூரு அலுவலகம் கடந்த 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் சோதனைகளை நடத்தியது. இதில் பல டிஜிட்டல் டோக்கன்கள் கைப்பற்றப்பட்டன. இது குறித்து அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பெரிய அளவிலான மோசடி நடந்ததாகக் குற்றம் சாட்டி, நெதர்லாந்துக்காரர் தெற்கு அந்தமானில் உள்ள இணையக் குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
அங்கு பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் பணமோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவரிடம் இருந்து பல கோடி முதலீடுகளைப் பெற்ற பிறகு, சந்தை நிலவரங்கள் உயர்ந்ததால், குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் வாக்குறுதியளிக்கப்பட்ட விநியோகங்களை நிறுத்தி வைத்து,டிஜிட்டல் டோக்கன்களை வழங்குவதை திடீரென நிறுத்திவிட்டனர். பெங்களூருவைச் சேர்ந்த ரவீந்திரா. கே என்பவருக்கு இந்த தொகை அனுப்பப்பட்டுள்ளன. இவர்தான் இந்த மோசடியின் முக்கிய மூளையாக செயல்பட்டுள்ளார். மோசடியின் மொத்த மதிப்பு ரூ. 336 கோடி என தெரிவித்துள்ளது.
