எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் மக்களவை, மாநிலங்களவை 2வது நாளாக முடங்கின

புதுடெல்லி: நீட் வினாத்தாள் கசிவு, கரப்பான் பூச்சி கட்சி போராட்டம், அயோத்தி ராமர் கோயில் நன்கொடை திருட்டு விவகாரம் ஆகியவை குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் 2வது நாளாக நேற்றும் முடங்கின. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில், நீட் வினாத்தாள் கசிவு, கரப்பான் பூச்சி கட்சி இளைஞர்களின் போராட்டம், அயோத்தி ராமர் கோயில் நன்கொடை திருட்டு குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

இதை அரசு ஏற்காததால் முதல் நாளிலேயே இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில், மக்களவை நேற்று காலை 11 மணிக்கு கூடியதும், நீட் வினாத்தாள் கசிவு மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது நடத்தப்பட்ட காவல்துறை தடியடி குறித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கங்களை எழுப்பத் தொடங்கினர். இதனால் அவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு, மீண்டும் தொடங்கிய போதும் எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர்.

இதனால் அவை அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டு பின்னர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதே போல மாநிலங்களவையில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் போராடிய மாணவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியதை கண்டித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் நடத்திய போராட்டத்தால் அவை பலமுறை ஒத்திவைக்கப்பட்டு பின்னர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்றம் தொடர்ந்து 2வது நாளாக எந்த அலுவலும் நடைபெறாமல் முடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: