*விவசாயிகள் மகிழ்ச்சி
ஆனைமலை : பொள்ளாச்சி சுற்று வட்டார கிராமங்களில் உள்ள தென்னைகளில் உற்பத்தியாகும் பச்சை நிற இளநீர் மற்றும் செவ்விளநீர் உள்ளிட்டவைக்கு அதிக கிராக்கி உள்ளது. இதில், இந்த ஆண்டில் மே மாதம் துவக்கம் வரையிலும் கோடை வெயிலின் தாக்கத்தின்போது, பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை சுற்றுவட்டார பகுதியிலிருந்து லாரி மற்றும் டெம்போக்கள் மூலம் வெளி மாவட்டங்களுக்கும். வெளி மாநிலங்களுக்கும் இளநீர் அதிகளவு அனுப்பப்பட்டது.
பொள்ளாச்சி இளநீருக்கு அதிக கிராக்கியால் தோட்டங்களில் நேரடி விலையாக, சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு வரை ஒரு இளநீர் ரூ.53 வரை, வியாபாரிகள் கொள்முதல் செய்தனர். கடந்த மாதத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை பெய்திருந்தாலும், பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில் இளநீர் உற்பத்தி கடந்த ஆண்டைவிட குறைவால், வெளியிடங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் இளநீரின் எண்ணிக்கை குறைவாகவே இருந்துள்ளது.
இதனால், பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை சுற்று வட்டார பகுதியில் இருந்து அனுப்பப்படும். இளநீர் விலை தொடர்ந்து உயர்வாக இருந்துள்ளது. இதற்கிடையே இந்த மாதத்தில் எதிர்பார்த்த அளவில் பருவமழை இல்லாததால் மீண்டும் இளநீருக்கு கிராக்கி அதிகமாக உள்ளது.
இந்த வாரத்திலும் நேற்றைய நிலவரப்படி பண்ணைவிலையாக ரூ.52 வரை உயர்ந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் இளநீர் விலை குறையும் நிலை ஏற்படும். ஆனால் நடைபாண்டில் பருவமழை எதிர்பார்த்தபடி இல்லாததால் அதன் விலை தொடர்ந்து அதிகரித்தது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
