*வேறு இடத்திற்கு மாற்றக்கோரி நரிக்குறவர்கள் மனு
ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் ப்ரியா தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பொது மக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் பெற்றுகொண்டு குறைகளை கேட்டறிந்தார்.
மேலும் டி.ஆர்.ஓ பேபி இந்திரா, திட்ட இயக்குநர் செல்வராணி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மீனா, மாவட்ட சமூக நீதித்துறை அலுவலர் பூமா, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பூமா, மாற்றுத்திறனாளி நல அலுவலர் செந்தில்குமார் ஆகியோரும் பொது மக்களிடம் மனுக்களை பெற்றனர்.
பொது மக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் மற்றும் மனு நிராகரிப்பிற்கான, காரணங்களையும் மனுதாரர்களுக்கு வழங்கிட வேண்டுமென அலுவலர்களுக்கு கலெக்டர் ப்ரியா உத்தரவிட்டார்.
கூட்டத்தில் திமிரி கலவை ரோடு நரிக்குறவர் காலனி அண்ணா நகர் சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: நாங்கள் அனைவரும் நரிக்குறவர் இனத்தை சேர்ந்தவர்கள்.
எங்களுக்கு மேற்படி திமிரி கிராமத்தில் கலவை ரோட்டில் அரசால் 1995ம் ஆண்டு பட்டா வழங்கப்பட்டு எங்களின் வசதிக்கேற்ப தகர ஷீட், சிமெண்ட் சீட் வீடு, தளம் வீடு, தொகுப்பு வீடு போன்ற வீடுகளை கட்டி அனைவரும் வசித்து வருகிறோம்.
மேற்படி இடமானது எங்களுக்கு பூர்வீகமாகவும் நீண்ட காலமாக வசித்து வரும் இடமாகவும், எங்களுக்கு தொழில் செய்யவும், மருத்துவமனை செல்லவும், போக்குவரத்துக்கு மிகவும் எளிதாகவும், நாங்கள் அனைவரும் ஒற்றுமையாகவும் வசித்து வந்த இடம் ஆகும். நாங்கள் ஒன்றாக வசித்து வரும் இடத்தில் ரயில்வே மேம்பாலம் அமைவதாகவும் அதற்கு நாங்கள் வசித்து வரும் இடத்தை கட்டாயம் தர வேண்டும் எனவும் தொடர்ந்து அதிகாரிகள் இந்த இடத்திற்கு வருகின்றனர்.
நீண்டகால தொடர் தீண்டாமை மற்றும் சமூகத்தில் கீழ் நிலையில் வாழ்ந்து வந்த எங்களுக்கு தற்போது தான் ஒரு இடம் நிலையாக அமைந்து அதற்கு அரசால் சமீபத்தில் பட்டா வழங்கப்பட்டது.
ஆனால் அந்த இடத்தை உடனே அரசு பிடுங்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருவது. எங்களுக்கு மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. எங்களது வீடுகளை அகற்றி தான் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற எண்ணம் எங்களை வருத்துகிறது.
இத்தனை ஆண்டு காலம் வாழ்ந்து வந்த இடமும், நாங்கள் எங்கள் கடும் உழைப்பில் கட்டப்பட்ட வீடும் எங்களிடம் இருந்து அரசு நிர்வாகம் பிடுங்கிக் கொள்ளும் என்ற எண்ணத்தில் இரவு பகல் தூங்காமல் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம்.
எங்களது இடத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். ரயில்வே மேம்பாலத்தை வேறு இடத்தில் அமைக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும். எனவே மாவட்ட கலெக்டர் ரயில்வே மேம்பாலம் அமையும் இடத்தை உடனடியாக மாற்றி அமைத்து எங்கள் அனைவரின் வாழ்வாதாரம் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இந்து மக்கள் கட்சி- தமிழகம் வேலூர் கோட்ட தலைவர் மோகன் அளித்த மனுவில்: திருபாற்கடல் கிராமத்தில் அலமேலு மங்கை சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் உள்ளது.
இக்கோயிலுக்கு கடந்த 2011ம் ஆண்டு ஜனவரி 24ம் தேதி அன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் பின்னர் மேற்கண்ட திருக்கோயிலுக்கு இதுநாள்வரை புனரமைப்பு பணி செய்யாமலும், வர்ணம் பூசாமலும், கோயிலில் கோபுரங்களின் உச்சியில் செடிகள் வளர்ந்து கோபுரங்கள் சேதமடைந்து வருகிறது.
மேலும் கோயில் கோபுரங்களில் உள்ள சிற்பங்கள் பொலிவு இழந்து காணப்படுகிறது. எனவே கலெக்டர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலுக்கு கும்பாபிஷேசம் நடைபெற உடனடியாக உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
இதேபோல் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து பட்டா குறைகள், பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித் தொகை, கூட்டுறவு கடனுதவி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சர்பாக வீடுகள் வேண்டி, பொது பிரச்னைகள், குடிநீர்வசதி, வேலை வாய்ப்பு வேண்டி மனுக்கள் மற்றும் பொது நலன் குறித்து என மனுக்கள் வரப்பெற்றன.
இதனை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ.13,500 மதிப்பீட்டில் சக்கர நாற்காலி இணை கலெக்டர் ப்ரியா வழங்கினார். கூட்டத்தில் துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
