புதுவை பெண் உட்பட 3 பேரிடம் பணமோசடி

புதுச்சேரி, ஜூன் 21: புதுவை பெண் உட்பட 3 பேரிடம் பண மோசடி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி பாகூரை சேர்ந்த பெண் ஒருவருக்கு, மர்ம நபரிடம் இருந்து தொலைபேசி மூலம் அழைப்பு வந்தது. அப்போது, மர்ம நபர் தங்களது கிரெடிட் கார்டு விவரங்களை கேட்டுள்ளார். இதனை நம்பி மேற்கூறிய பெண், கார்டு விவரங்களை வழங்கிய சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கிலிருந்த 46,640 ரூபாயை மோசடி கும்பல் எடுத்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.மேலும், தவளக்குப்பத்தை சேர்ந்த ஆண் நபரை, மர்ம நபர் தொடர்புகொண்டு குறைந்த வட்டியில் லோன் தருவதாக கூறியதை நம்பி ரூ.10 ஆயிரத்தை மோசடி கும்பலிடம் ஏமாந்துள்ளார்.இதேபோல், நெட்டப்பாக்கத்தை சேர்ந்த ஆண் நபரும் ரூ.3,500யை மோசடி கும்பலிடம் ஏமாந்துள்ளார். மேற்கூறிய நபர்கள் மொத்தமாக ரூ.60 ஆயிரத்தை மோசடி கும்பலிடம் இழந்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் தனித்தனியாக புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: