புதுவையில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட 86,271 பேர் மீது நடவடிக்கை

 

புதுச்சேரி, ஜூலை 20: புதுச்சேரியில் நடப்பாண்டில் முதல் 6 மாதங்களில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட 86,271 பேர் மீது போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டிய 30,342 பேரும் நடவடிக்கையில் சிக்கியுள்ளனர். இது குறித்து புதுச்சேரி போக்குவரத்து சீனியர் எஸ்பி திவ்யா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: புதுச்சேரி யூனியன் பிரதேசம் முழுவதும் முக்கிய போக்குவரத்து விதிமீறல்களுக்கு எதிராக புதுச்சேரி போக்குவரத்து காவல்துறை தீவிர அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுதல், வாகனம் ஓட்டும் போது கைப்பேசி பயன்படுத்துதல், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல் ஆகியவை தடுக்க சிறப்பு சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

2026ம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் (ஜனவரி முதல் ஜூன் 2026 வரை), புதுச்சேரியில் பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட 86,271 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவற்றின் விவரங்கள் பின்வருமாறு: தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டிய 30,342 பேர், வாகனம் ஓட்டும்போது கைப்பேசி பயன்படுத்திய 10,185 பேர், வாகனம் ஓட்டிய 482 சிறார்கள், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய 392 பேர், சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டிய 3,889 பேர், எதிர்திசையில் வாகனம் ஓட்டிய 5,377 பேர், சிவப்பு விளக்கை மீறி சென்ற 4,736 பேர், ஏர் ஹார்ன் பயன்படுத்திய 200 பேர், மாற்றியமைக்கப்பட்ட சைலன்சர் பயன்படுத்திய 29 பேர், அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டிய 647 பேர், அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிக பயணிகளை ஏற்றிச் சென்ற 161 பேர் மற்றும் பிற போக்குவரத்து விதிமீறல்களை மீறிய 29,831 பேர் மொத்தம் 86,271 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து விதிமீறல்களுக்கு எதிரான அமலாக்க நடவடிக்கைகள் ஆண்டு முழுவதும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். சாலை விபத்துகளை குறைத்து, அனைத்து சாலைப் பயனாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் புதுச்சேரி போக்குவரத்து காவல்துறை உறுதியாக செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் அனைவரும் போக்குவரத்து விதிகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிய வேண்டும். வாகனம் ஓட்டும்போது கைப்பேசி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது. போக்குவரத்து சிக்னல்களை மதித்து நடக்க வேண்டும். சாலை விதிகளை பின்பற்றுவது விபத்துகளை தடுத்து உயிர்களை காப்பாற்றும். புதுச்சேரியின் சாலைகளை அனைவருக்கும் பாதுகாப்பானதாக மாற்றும் இந்த முயற்சியில், பொதுமக்கள் முழு ஒத்துழைப்பையும் வழங்க புதுச்சேரி போக்குவரத்து காவல்துறை கேட்டுக்கொள்கிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Related Stories: