ரெட்டிச்சாவடி, ஜூலை 14: கடலூர் மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு பல்வேறு இடங்களில் கஞ்சா குற்றவாளிகளை கைது செய்து வருகின்றனர். இந்த நிலையில் ரெட்டிச்சாவடி பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ரெட்டிச்சாவடி போலீசார், பெரிய காட்டுப்பாளையம் பகுதியில் நேற்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது பெரிய காட்டுப்பாளையம் பாக்கியபெருமாள் ஆர்ச் பகுதியில் சந்தேகப்படும்படி 2 வாலிபர்கள் நின்று கொண்டு இருந்தனர்.
அவர்களைப் பிடித்து விசாரணை நடத்தியபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறவே சந்தேகம் அடைந்த போலீசார் வாலிபர்களிடம் சோதனை செய்தனர். அப்போது அவர்கள் வைத்திருந்த பையில் கிலோ கணக்கில் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில், திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த திவாகரன்(19) மற்றும் சிவா(18) என்பது தெரியவந்தது. மேலும் இவர்களிடம் நடத்திய விசாரணையில், ஒடிசாவில் இருந்து திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் என்பவர் கஞ்சா வாங்கி இவர்களிடம் கொடுத்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்த 25 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய ரஞ்சித்தை போலீசார் தேடி வருகின்றனர்.
