சென்னை: தனியார் பால் கொள்முதல் விலை அதிகரித்துள்ளதால் ஆவினுக்கு பால் வழங்க விவசாயிகள் தயக்கம் காட்டுகின்றனர். இதனால் தமிழ்நாட்டில் பால் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகக்கூடும் என பால் கூட்டுறவு சங்கங்கள் தெரிவித்துள்ளன. தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின், தமிழ்நாடு முழுவதும் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்கள் மற்றும் கிராம அளவிலான பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் தினசரி பால் கொள்முதல் செய்து வருகிறது.
பல ஆண்டுகளாக கிராமப்புறங்களில் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு ஆவின் முக்கிய ஆதாரமாக இருந்து வந்தது. ஆனால், தற்போது அதிகரித்து வரும் கால்நடை பராமரிப்பு செலவுகள், தீவனங்களின் விலை உயர்வு மற்றும் கொள்முதல் விலை உயர்த்தப்படாத நிலை ஆகிய காரணங்களால், ஆவினுக்கு பால் வழங்கும் விவசாயிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது.
கடந்த சில ஆண்டுகளாக பெரும்பாலான கிராமங்களில் உள்ள பால் உற்பத்தியாளர்கள், தினசரி பாலை கூட்டுறவு சங்கங்களில் ஒப்படைத்து வந்தனர். இதன் மூலம் அவர்களுக்கு உறுதியான சந்தையும், முறையான பணப் பரிவர்த்தனையும் கிடைத்து வந்தது. தற்போது அந்த நிலை மாறி, அதிக விலை வழங்கும் தனியார் நிறுவனங்களை நோக்கி விவசாயிகள் திரும்பி வருகின்றனர். தற்போது ஆவின் நிறுவனம் ஒரு லிட்டர் பால் சராசரியாக ரூ.34க்கு கொள்முதல் செய்து வருகிறது. ஆனால், பல தனியார் பால் நிறுவனங்கள் ஒரு லிட்டர் பாலுக்கு ரூ.45 முதல் ரூ.50 வரை கொள்முதல் விலை வழங்குகின்றன. சில பகுதிகளில் தரமான பாலுக்கு இதைவிட அதிக விலையும் வழங்கப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த விலை வித்தியாசம் காரணமாக, ஆவினுக்கு பால் வழங்குவதில் ஆர்வம் குறைந்து, அதிக வருமானம் கிடைக்கும் தனியார் நிறுவனங்களையே பெரும்பாலான பால் உற்பத்தியாளர்கள் தேர்வு செய்து வருகின்றனர். மேலும் கிராமங்களில் வளர்க்கும் மாடுகள் அங்கேயே சுற்றியிருந்த மேய்ச்சல் நிலங்களில் இயற்கையாக மேய்ந்தன. காலை மேய்ச்சலுக்கு சென்ற கால்நடைகள் மாலையில் வீடு திரும்பும்.
இதனால் பசுந்தீவனங்களை அதிக அளவில் விலை கொடுத்து வாங்க வேண்டிய அவசியம் இல்லை. தேவையான அளவில் தவிடு, புண்ணாக்கு போன்ற தீவனங்களை மட்டுமே வாங்கினால் போதுமானதாக இருந்தது. மேலும், விவசாய நிலங்களில் விளைந்த சோளத்தட்டை, நெல் வைக்கோல் உள்ளிட்ட விவசாய கழிவுப் பொருட்களும் கால்நடைகளுக்கு முக்கிய தீவனமாக பயன்படுத்தப்பட்டன. வறட்சி காலங்களிலும் வீட்டில் சேமித்து வைத்திருந்த வைக்கோல் கால்நடைகளுக்கு உணவாக வழங்கப்பட்டதால் பராமரிப்பு செலவு குறைவாக இருந்தது.
பசுந்தீவனம் கிடைக்காத நேரங்களில் தவிடு, புண்ணாக்கு உள்ளிட்ட தீவனங்களை அதிக அளவில் வாங்க வேண்டிய சூழல் உள்ளது. ஆனால், அவற்றின் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. குறிப்பாக, 50 கிலோ எடையுள்ள புண்ணாக்கு மூட்டை தற்போது ரூ.1,800 வரை விற்பனை செய்யப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதேபோல் கால்நடை தீவனங்கள், மருந்துகள், தடுப்பூசிகள், தொழிலாளர் கூலி மற்றும் போக்குவரத்து செலவுகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
இந்த நிலையில், ஒரு லிட்டர் பாலை ரூ.34க்கு விற்பனை செய்வதால் உற்பத்தி செலவைக்கூட ஈடுகட்ட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர். தனியார் நிறுவனங்களுக்கு பால் வழங்குவதோடு, பல விவசாயிகள் தற்போது வீடுகளுக்கு நேரடியாக பால் விநியோகம் செய்வதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் மூலம் ஒரு லிட்டர் பாலை ரூ.60 முதல் ரூ.62 வரை விற்பனை செய்ய முடிகிறது.
இதனால் ஆவினுக்கு பால் வழங்குவதை விட நேரடி விற்பனை மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவது பொருளாதார ரீதியாக அதிக லாபம் தருவதாக கருதப்படுகிறது. தொடர்ந்து அதிகரித்து வரும் பராமரிப்பு செலவுகள் மற்றும் குறைந்த வருமானம் காரணமாக, பல சிறு விவசாயிகள் மாடுகள் வளர்ப்பதை படிப்படியாக கைவிட்டு வருகின்றனர். இதனால் பால் உற்பத்தியும் குறைந்து வருகிறது. இதன் தாக்கம் ஆவின் நிறுவனத்திற்கான பால் வரத்திலும் எதிரொலித்து வருகிறது.
ஆவின் நிறுவனம் தனியார் நிறுவனங்களுக்கு இணையாக அல்லது அதற்கு நிகரான அளவில் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்பதே பால் உற்பத்தியாளர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. தற்போதைய உற்பத்திச் செலவுகளை கருத்தில் கொண்டு கொள்முதல் விலை நிர்ணயிக்கப்பட்டால் மட்டுமே விவசாயிகள் மீண்டும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஆவினுக்கு பால் வழங்க முன்வருவார்கள் என வலியுறுத்துகின்றனர்.
மேலும், கால்நடை தீவனங்களுக்கு மானியம் வழங்குதல், மேய்ச்சல் நிலங்களை பாதுகாத்து மேம்படுத்துதல், கால்நடை மருத்துவ சேவைகளை கிராமப்புறங்களில் விரிவுபடுத்துதல், பால் உற்பத்தியாளர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்குதல் போன்ற நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
