×

ரூ.100 கோடி நில முறைகேடு விவகாரம்: பழநி கோயில் முன்னாள் இணை ஆணையரிடம் சிபிசிஐடி விசாரணை

திண்டுக்கல்: ரூ.100 கோடி நில முறைகேடு தொடர்பாக, பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் முன்னாள் இணை ஆணையரிடம், சிபிசிஐடி போலீசார் இன்று தீவிர விசாரணை நடத்தினர். இதனால், திண்டுக்கல்லில் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், பழநி அடிவாரம் ஆண்டவன் பூங்கா சாலையில் தண்டபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 1.40 ஏக்கர் நிலத்தை முருகதாஸ் என்பவர் சேதுபதி, வெள்ளைத்துரை ஆகியோருக்கு கடந்த 6ம் தேதி ரூ.2 கோடிக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்தார். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து பழநி கோயில் நிர்வாகம் அளித்த புகாரின்பேரில் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், நிலத்தை கிரையம் செய்து கொடுத்த முருகதாஸ், விலைக்கு வாங்கிய வெள்ளைத்துரை, சேதுபதி ஆகியோர் மீது அடிவாரம் போலீசார் 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

இதை தொடர்ந்து துறைரீதியான நடவடிக்கையாக சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், மாவட்ட பதிவாளர் சசிகலா சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இது தொடர்பாக ஐகோர்ட் கிளையில் செய்யப்பட்ட மேல்முறையீடு வழக்கில் பத்திரப்பதிவு ரத்து செய்யப்பட்டது. இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடி எஸ்பி சாஜிதா மேற்பார்வையில் டிஎஸ்பி அஜய் தங்கம் தலைமையில் 5 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 20க்கும் மேற்பட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக நிலத்தை எழுதி கொடுத்த தண்டபாணி சுவாமி டிரஸ்ட் நிர்வாகி முருகதாஸ், எழுதி வாங்கிய வெள்ளத்துரை, சேதுபதி, அறக்கட்டளை நிர்வாகிகள், பத்திரம் தயாரித்த வழக்கறிஞர், பத்திர எழுத்தர், சார்பதிவாளர் அலுவலக ஊழியர்கள், கோயில் அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் சிபிசிஐடி போலீசார் துருவி துருவி விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து அவர்களது வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில் செல்போன் உள்பட முக்கிய ஆவணங்கள் கைப்பற்றி தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், நிலத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்தது தொடர்பாக முழுமையாக ஆய்வு செய்ய கூடுதல் பதிவு தலைவர் சுதாமல்யா, உதவி பதிவு தலைவர் பூங்கொடி, மாவட்ட பதிவாளர் கண்ணன் அடங்கிய உயர்மட்ட விசாரணை குழு நேற்று காலை பழநி சார்பதிவாளர் அலுவலகத்தில் விசாரணை நடத்தினர். பத்திரப்பதிவு நாளில் சார்பதிவாளர் அலுவலக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். மேலும், சார்பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரிந்த ஒவ்வொரு ஊழியரையும் தனித்தனியாக அழைத்து பத்திரப்பதிவு நாளில் நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தனர். ஊழியர்களின் வாக்குமூலங்கள் கேமராவிலும் பதிவு செய்யப்பட்டன. தொடர்ந்து பிரச்னைக்குரிய இடத்தை பதிவு செய்ய வேண்டாமென கோயில் நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்ட கடிதங்கள், பதிவுத்துறைக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவுகளையும் ஆய்வு செய்தனர்.

இதை தொடர்ந்து 2 குழுக்களாக 10 பேர் கொண்ட சிபிசிஐடி போலீசாரும் நேற்று பழநி சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆவணங்களை ஆய்வு செய்தனர். 7 மணி நேரத்திற்கு மேல் சார்பதிவாளர் அலுவலகத்தில் நடந்த ஆய்வு மற்றும் விசாரணையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் முன்னாள் இணை ஆணையர் மாரிமுத்துவை இன்று விசாரிக்க சிபிசிஐடி சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது. இதன்படி மாரிமுத்து திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் இன்று காலை ஆஜரானார். அவரிடம் சிபிசிஐடி எஸ்பி சாஜிதா தீவிர விசாரணை நடத்தி வருகிறார். இதனால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பழநி கோயில் முன்னாள் இணை ஆணையர் மாரிமுத்து தற்போது பதவி உயர்வு பெற்று அறநிலையத்துறை கூடுதல் துணை ஆணையராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, பழநி சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவுக்குழு உயரதிகாரிகள் இன்று 2வது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : CBCID ,Palani temple ,Dindigul ,CBCID police ,Palani Thandayutapani Swamy temple ,Andavan Park Road ,Palani Adivaram ,
× RELATED தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜயுடன் பின்னணி பாடகர் அறிவு சந்திப்பு