×

ஒன்றிய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் தமிழகத்தில் 3 முக்கிய ரயில்வே திட்டங்களுக்கு சிறப்பு அந்தஸ்து

சென்னை: ஒன்றிய ரயில்வே அமைச்சகம் தமிழகத்தில் 3 முக்கிய ரயில்வே திட்டங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி உள்ளது. தமிழ்நாட்டில் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக பல ரயில்வே திட்டங்கள் மந்தமாக இருந்த நிலையில், ஒன்றிய ரயில்வே அமைச்சகம் மாநிலத்தின் மூன்று முக்கிய ரயில்வே உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு ‘சிறப்பு ரயில்வே திட்டம்’ அந்தஸ்து வழங்கியுள்ளது.அரக்கோணம்-ரேணிகுண்டா இடையேயான 77 கி.மீ. நீளமுள்ள 3 மற்றும் 4-வது ரயில் பாதை அமைக்கும் திட்டம், கும்மிடிப்பூண்டி-கூடூர் இடையேயான 90 கி.மீ. நீளமுள்ள 3 மற்றும் 4-வது ரயில் பாதை திட்டம், ஓசூர்-ஓமலூர் இடையேயான 147 கி.மீ. இரட்டை ரயில் பாதை திட்டம் ஆகிய மூன்று திட்டத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி உள்ளது. இந்த சிறப்பு அந்தஸ்தின் மூலம் சரக்கு மற்றும் பயணிகள் ரயில் போக்குவரத்து மேம்படுவதுடன், நெரிசல் குறைந்து, ரயில்வேயின் செயல்திறனும் வருவாயும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, கன்னியாகுமரி-திருவனந்தபுரம் இரட்டை பாதை திட்டம், மதுரை தூத்துக்குடி புதிய ரயில் பாதை (அருப்புக்கோட்டை வழியாக), திண்டிவனம்-செஞ்சி-திருவண்ணாமலை ரயில் பாதை திட்டம் உள்ளிட்ட பல முக்கிய ரயில்வே திட்டங்கள் நீண்டகாலமாக தாமதமடைந்துள்ளன. இந்த நிலையில், மூன்று முக்கிய திட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு ரயில்வே திட்ட அந்தஸ்து, எதிர்கால ரயில்வே உள்கட்டமைப்பு பணிகளை விரைவாக நிறைவேற்றுவதற்கான முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

இது தொடர்பாக மூத்த வருவாய்த் துறை அதிகாரிகள் கூறியதாவது: பொதுவாக நிலம் கையகப்படுத்த 12 முதல் 36 மாதங்கள் வரை ஆகும். ஆனால் சிறப்பு திட்டத்தின் கீழ், தொடக்க அறிவிப்பு வெளியானதும் அனைத்து நிலங்களும் ஒரே தொகுப்பாக கருதப்பட்டு, உரிமையாளர்களுடன் நேரடியாக இழப்பீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும். வழக்கமாக ரூ.3 முதல் ரூ.4 லட்சம் வரை கிடைக்கும் இழப்பீட்டை, ரூ.6 லட்சம் வரை பேசி பெற முடியும். இதனால் 3 முதல் 6 மாதங்களுக்குள் நிலம் கையகப்படுத்தும் பணியை முடிக்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags : Tamil Nadu ,Union Ministry of Railways ,Chennai ,Union Railway Ministry ,
× RELATED தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜயுடன் பின்னணி பாடகர் அறிவு சந்திப்பு