- ஈரோடு பேருந்து நிலையம்
- சூரிய சக்தி புதிய பேருந்து நிலையம்
- மொடக்குரிச்சி
- சோலார் புதிய பேருந்து நிலையம்
- தமிழ்நாடு…
மொடக்குறிச்சி : ஈரோடு பஸ் ஸ்டாண்டிலிருந்து சோலார் புது பஸ் ஸ்டாண்டுக்கு செல்லக்கூடிய பழுதடைந்த சாலையை சீரமைத்து அகலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.ஈரோடு பஸ் ஸ்டாண்டில் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பஸ்கள் வந்து சென்றதால் மாநகரில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
இதனையடுத்து ஈரோடு மாநகரத்திற்குள் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் தென் மாவட்டங்களில் இருந்து வரக்கூடிய பஸ்கள் சோலார் புது பஸ் ஸ்டாண்டில் நின்று செல்லும் வகையில் கடந்த ஆட்சியில் சோலாரில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டு கடந்த ஆண்டு திறக்கப்பட்டது.
இதனையடுத்து சோலார் பஸ் ஸ்டாண்டிலிருந்து கரூர், திண்டுக்கல்,மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தஞ்சாவூர் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய அனைத்து பஸ்களும் சோலார் புது பஸ் ஸ்டாண்டிலிருந்து இயக்கப்பட்டு வருகிறது. அதேபோல் வெள்ளகோவில், முத்தூர், சிவகிரி, மொடக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரக்கூடிய பஸ்கள் சோலார் புது பஸ் ஸ்டாண்ட் வரை மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சோலார் பஸ் ஸ்டாண்டுக்கு வரும் பயணிகள் ஈரோடு பஸ் ஸ்டாண்டுக்கு செல்வதற்காக டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.இந்த பஸ்கள் சோலார் பஸ் ஸ்டாண்டிலிருந்து சோலார் ரவுண்டானா, கார்மல் ஸ்கூல், மூலப்பாளையம், நாடார் மேடு, காளை மாட்டு சிலை வழியாக ஈரோடு பஸ் ஸ்டாண்டுக்கு செல்கிறது.ஈரோடு பஸ் ஸ்டாண்ட் மற்றும் சோலார் புது பஸ் ஸ்டாண்டிற்கும் இடையே தினசரி போக்குவரத்து அதிகளவில் காணப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சோலார் புது பஸ் ஸ்டாண்டில் இருந்து காளை மாட்டு சிலை வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக காலை மற்றும் மாலை வேளையில் பள்ளி,கல்லூரி செல்லும் பஸ்கள் மற்றும் வேலைக்கு செல்வோர் கார், பைக் போன்ற வாகனங்கள் அதிக அளவில் சென்று வருகிறது.
ஆனால் அதற்கு தகுந்தார் போல் புது பஸ் ஸ்டாண்டில் இருந்து காளை மாட்டு சிலை வரை உள்ள ரோடு அகலப்படுத்தப்படாமலும் சீரமைக்காமல் குண்டும் குழியுமாக காட்சியளித்து வருவதால் போக்குவரத்திற்கு பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
குறிப்பாக இந்திரா நகர், மூலப்பாளையம், நாடார் மேடு, கார்மல் ஸ்கூல் ஆகிய பகுதிகளில் உள்ள ரோடு மிக குறுகலாகவும் சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் மற்றும் பஸ் மற்றும் கனரக வாகனங்கள் செல்வதற்கு கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சோலார் புது பஸ் ஸ்டாண்டிலிருந்து ஈரோடு பஸ் ஸ்டாண்ட் வரை உள்ள ரோட்டை அகலப்படுத்தி வாகன ஓட்டிகள் சிரமமின்றி சென்றுவர சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
