சென்னிமலை, ஜூலை 20: சென்னிமலை அருகே 42 ஆண்டுகளுக்கு முன்பு பணிகள் தொடங்கப்பட்டு ரூ.16.46 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டு பயனற்று கிடக்கும் ஒரத்துப்பாளையம் அணையில் தண்ணீரை தேக்கி வைப்பதற்காக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் முடிவுக்காக அணை காத்திருக்கிறது. நொய்யல் ஆற்றின் குறுக்கே ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே ஒரத்துப்பாளையம் பகுதியில் ரூ.16.46 கோடி மதிப்பில் அணை கட்ட முடிவு செய்து கடந்த 1984ம் ஆண்டில் இதற்கான பணிகள் தொடங்கியது. பின்னர் 1992ல் அன்று ஒரத்துப்பாளையம் அணை திறக்கப்பட்டது. இந்த அணையின் மூலம் ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் 500 ஏக்கருக்கு மேல் நேரடி பாசனமும், கரூர் மாவட்டத்தில் 10 ஆயிரம் ஏக்கர் பாசனமும் பெறும் வகையில் கட்டப்பட்டது.
இந்த அணை கட்டப்பட்டதில் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்ட விவசாயிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் இந்த மகிழ்ச்சி ஓரிரு ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. அதன் பிறகு திருப்பூர் சாயக்கழிவுகளை தேக்கி வைக்கும் அணையாக ஒரத்துப்பாளையம் அணை மாறியது. இதனால் அணையை சுற்றியுள்ள விவசாயிகள் மட்டுமின்றி அணை நீர் சென்ற நொய்யல் ஆற்றின் இருபுறமும் உள்ள விவசாயிகளும் தங்களது குடிநீர் ஆதாரத்தை இழந்தனர். புண்ணிய நதி எனப்படும் நொய்யல் ஆற்றில் ஊற்று பறித்து தண்ணீர் குடித்து வந்த விவசாயிகள், சாயக்கழிவுகள் நிறைந்த ஒரத்துப்பாளையம் அணை நீரால் தங்களது கிணறுகளில் உள்ள தண்ணீரை கூட குடிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர்.
நாளடைவில் ஒரத்துப்பாளையம் அணையில் அதிகபட்சமாக 16 ஆயிரம் டிடிஎஸ் வரை உப்புத்தன்மை இருந்ததால் அணையை சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் பலருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. 300 டிடிஎஸ் அளவுக்கு மேல் உப்புத்தன்மை இருந்தாலே அந்த தண்ணீரை குடிக்க கூடாது என்ற நிலையில், 16 ஆயிரம் டிடிஎஸ் அளவுக்கு விஷமாக மாறிய ஒரத்துப்பாளையம் அணையில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றினால் தங்களது கிணறுகள் உள்ளிட்ட அனைத்து நீர்நிலைகளும் சாயக்கழிவாக மாறிவிடும் என்பதால் அணையில் இருந்து தண்ணீரை திறக்க கூடாது என நொய்யல் ஆற்றங்கரையோர விவசாயிகள் மட்டுமின்றி கரூர் மாவட்ட விவசாயிகளும் போர்க்கொடி தூக்கினார்கள்.
இதையடுத்து 1997ம் ஆண்டு முதல் அணையில் இருந்து தண்ணீரை திறப்பது நிறுத்தப்பட்டது. அதனால் அணையில் சாயக்கழிவுகள் நிரம்பி நின்றதால் சுற்றியுள்ள கிராமங்களில் நீர் நிலைகள் மேலும் மாசுபட்டது. அதேசமயம் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட காலங்களில் 6 முறை மட்டும் நொய்யல் ஆற்றில் 100 கன அடி முதல் 300 கன அடி வரை தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர் 2003ம் ஆண்டு நொய்யல் ஆற்று பாசன விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் அணையில் தேக்கி வைக்கப்பட்டுள்ள சாயக்கழிவு நீரால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும், அணை நீரை வெளியேற்ற வேண்டும் என்பது குறித்தும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இதன் பேரில், ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை பொறியாளர் சிவராமன் தலைமையிலான ஆய்வு குழுவை ஐகோர்ட் நியமித்து, அணையை முழுமையாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யக்கோரி கடந்த 14-7-2004 அன்று உத்தரவிட்டது. அதன் பேரில், சிவராமன் தலைமையிலான குழுவினர் பலமுறை ஒரத்துப்பாளையம் அணை மற்றும் நொய்யல் ஆற்று பகுதியை ஆய்வு செய்தனர். மேலும் அணை நீரை வெளியேற்ற கோரி விவசாயிகளின் தொடர் போராட்டங்கள் மற்றும் வழக்குகளை தொடர்ந்து, ஆய்வு குழுவின் பரிந்துரையின் 5 நாட்கள் அணையை திறக்க ஐகோர்ட் உத்தரவிட்டது. இதன் மூலம் அணையின் மதகுகள் திறக்கப்பட்டு 40 அடி கொள்ளளவில் இருந்த சாயக்கழிவு நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டது.
ஆனால் மறு உத்தரவு வரும் வரை அணையில் தண்ணீரை தேக்கி வைக்க கூடாது என ஐகோர்ட் உத்தரவிட்டிருந்ததால் அதன் பிறகு இன்று வரை அணைக்கு வரும் தண்ணீரை சேமித்து வைக்காமல் அப்படியே நொய்யல் ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. சென்னை ஐகோர்ட் 22-12-2006 அன்று வழங்கிய முக்கிய தீர்ப்பில், திருப்பூர் பகுதியில் இருந்து நொய்யல் ஆற்றுக்கு வரும் தண்ணீரில் பூஜ்ஜிய அளவில் தான் உப்புத்தன்மை இருக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. மேலும் கடந்த 28-1-2011 அன்று சென்னை ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவில், திருப்பூர் பகுதியில் முறைகேடாக இயங்கும் சாய, சலவை தொழிற்சாலைகளை கண்டறிந்து உடனடியாக அவற்றை மூடுவதுடன் மின் இணைப்பையும் துண்டிக்க வேண்டும் என அதிரடியாக உத்தரவு போட்டது. இதனால் திருப்பூர் பகுதியில் முறைகேடாக இயங்கி வந்த 700க்கும் மேற்பட்ட சாய ஆலைகள் மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் சீல் வைக்கப்பட்டதுடன், மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.
அதன் பிறகு கடந்த சில ஆண்டுகளாக ஒரத்துப்பாளையம் அணைக்கு வரும் தண்ணீரில் 1300 டிடிஎஸ் என்ற அளவிலேயே உப்புத்தன்மை இருந்து வந்தாலும், மழைக்காலங்களில் திருப்பூரில் இருந்து சாயக்கழிவுகளை நொய்யல் ஆற்றில் திறந்து விடுவதாக புகார்கள் வருவது உண்டு. சுமார் 1300 டிடிஎஸ் அளவுள்ள தண்ணீரை குடிப்பதற்கு அல்லாமல் விவசாயத்துக்கு மட்டும் பயன்படுத்தலாம் என்றாலும், ஐகோர்ட்டின் மறு உத்தரவு வரும் வரை தண்ணீரை தேக்கி வைக்க அனுமதி இல்லை.
அதனால் ஒரத்துப்பாளையம் அணையில் தண்ணீரை தேக்கி வைக்க உத்தரவு வழங்கக்கோரி கடந்த 2024ம் ஆண்டில் விவசாயி ஒருவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இதன் பேரில், 20-12-2024 அன்று சென்னை ஐகோர்ட் நீதிபதி சுந்தர் பிறப்பித்த உத்தரவில், மாசு கட்டுப்பாட்டு வாரியத்துடன் ஈரோடு மற்றும் திருப்பூர் கலெக்டர்கள் கலந்து ஆலோசித்த பிறகு அணையில் தண்ணீரை தேக்கி வைப்பதற்கான நடவடிக்கை எடுப்பதாக கூடுதல் அரசு தலைமை வக்கீல் உறுதி அளித்துள்ளார் என்றும், பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு இவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் நீதிபதி தெரிவித்தார்.
அதனால் திருப்பூர் பகுதியில் இருந்து ஒரத்துப்பாளையம் அணைக்கு வரும் தண்ணீரில் “ஜீரோ டிஸ்சார்ஜ்” அதாவது சாயக்கழிவு அறவே இல்லை என மாசு கட்டுப்பாட்டு வாரியம் உறுதி அளித்தால் தான் ஒரத்துப்பாளையம் அணையில் தண்ணீரை தேக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் முடிவுக்காக ஒரத்துப்பாளையம் அணை காத்திருக்கிறது. இந்த முடிவு குறித்து விரைவில் அறிவிக்க வேண்டும் என மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
