பவானிசாகர் அருகே ஜி ராம் ஜி திட்டத்தில் வேலை வழங்க கோரி தொழிலாளர்கள் முற்றுகை

சத்தியமங்கலம், ஜூலை 21: பவானிசாகர் அருகே ஜி ராம் ஜி திட்டத்தில் வேலை வழங்க கோரி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் தற்போது பெயர் மாற்றப்பட்டு விபி ஜி ராம் ஜி என்ற பெயரில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் பவானிசாகர் ஊராட்சி ஒன்றியம், புங்கார் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் வசிக்கும் தொழிலாளர்கள் புதிய திட்டத்தின் கீழ் வேலை வழங்கக்கோரி நேற்று காலை திடீரென புங்கார் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் லிங்கராஜ் மற்றும் பவானிசாகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். புதிய திட்டத்தின் கீழ் பணி வழங்குவதற்கு தொழிலாளர்கள் வேலை கேட்டு விண்ணப்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 230 தொழிலாளர்கள் புதிய திட்டத்தின் கீழ் வேலை வழங்க கோரி மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தொழிலாளர்களின் விண்ணப்பங்கள் ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டு 15 நாட்களுக்குள் வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதைத்தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: