சாப்பிட்ட 13 பேருக்கு வாந்தி, மயக்கம் எதிரொலி; ஆரணி அசைவ ஓட்டலுக்கு ‘சீல்’ வைப்பு: அதிகாரிகள் நடவடிக்கை

 

ஆரணி, ஜூலை 20: ஆரணி ஓட்டலில் சாப்பிட்ட 13 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து அந்த ஓட்டலுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.  திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் கடந்த 17ம் தேதி கோயில் திருவிழா நடந்தது. இதில் பங்கேற்க ஆரணி டவுன் அருணகிரி சத்திரம் விநாயகர் கோயில் தெருவை சேர்ந்த தொழிலாளி துரைராஜ் (31), அவரது மனைவி பிரியதர்ஷினி (26), மகன்கள் ரோகித் (11), முகுந்தன்(5), அதேபகுதியை சேர்ந்த சண்முகசுந்தரம் மகள் மதுமிதா(13), மகன் ரோகித்(11), சிவபிரகாஷ் மகன் கோபிநாத்(23), லாடப்பாடியை சேர்ந்த லாரன்ஸ் இவரது மனைவி லட்சுமி, இவர்களது மகன் அர்த்திக்(4), கல்லேரிப்பட்டு கிராமத்தை சேர்ந்த சரத்குமார்(35), இவரது மனைவி விஜயலட்சுமி(32) உள்ளிட்ட 15பேர் வந்தனர்.

அவர்கள் அங்குள்ள ராட்டிணமங்கலம் கூட்ரோடு சாலையில் இயங்கி வரும் அசைவ ஓட்டலுக்கு சென்று அசைவ உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட்டனர். பின்னர் வீடு திரும்பிய நிலையில் நேற்றுமுன்தினம் அதிகாலை முதல் இவர்களில் 13 பேருக்கு அடுத்தடுத்து தலைவலி, வாந்தி, மயக்கம் வயிற்றுபோக்கு ஏற்பட்டது. உடனே அவர்கள் ஆரணி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் பானுசுஜாதா தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர் தங்கராஜ், ரவிவர்மன், கலைஷ்குமார் ஆகியோர் ஓட்டலில் ஆய்வு செய்தனர். அந்த ஓட்டலில் உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக சேலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுதொடர்பாக ஓட்டல் உரிமையாளருக்கு நோட்டீஸ் கொடுத்து, ஓட்டலுக்கு நேற்றுமுன்தினம் இரவு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: