மயாமியில் கோல் மழை! 6-4 என பிரான்ஸ் அணியை பந்தாடி: வெண்கலம் வென்றது இங்கிலாந்து

மயாமி: ஃபிபா உலக கோப்பை கால்பந்து தொடரின் 3வது இடத்துக்கான மோதலில், பிரான்ஸ் அணியை 6-4 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்ற இங்கிலாந்து வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றது. நடப்பு உலக கோப்பையின் அரையிறுதி ஆட்டங்களில் தோல்வியைத் தழுவிய பிரான்ஸ், இங்கிலாந்து அணிகள் 3வது இடத்துக்காக மோதின. மயாமி அரங்கில் நடந்த இப்போட்டியின் முதல் பாதி ஆட்டத்தில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய இங்கிலாந்து அணி அடுத்தடுத்து கோல் போட்டு பிரான்ஸ் தரப்பி அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ஆட்டம் தொடங்கிய 3வது நிமிடத்திலேயே இங்கிலாந்தின் டெக்லான் ரைஸ் அபாரமாக கோல் அடித்து கணக்கை தொடங்கி வைத்தார். அதே வேகத்துடன் பிரான்ஸ் கோல் பகுதியை முற்றுகையிட்டு தாக்குதலைத் தொடர்ந்த இங்கிலாந்து அணிக்கு எஸ்ரி கோன்சா 18வது நிமிடத்தில் அடுத்த கோலை அடிக்க, 0-2 என பிரான்ஸ் பின்தங்கியது.  அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்கு முன்பாகவே புகயோ சகா அடுத்தடுத்து 2 கோல் போட்டு மிரட்ட (37வது நிமிடம், 45’+1’) இடைவெளையின்போது இங்கிலாந்து 4-0 என முன்னிலை வகித்தது.

எதிர்பாராத இந்த பின்னடைவால் வெகுண்டெழுந்த பிரான்ஸ் அணி 2வது பாதியில் புதிய உத்வேகத்துடன் தீவிர தாக்குதலை மேற்கொண்டது. இங்கிலாந்து தற்காப்பு அரணை தகர்த்து முன்னேறிய பிரான்ஸ் அணி தன் பங்குக்கு கோல் மழை பொழிய ஆட்டம் விறுவிறுப்பானது. 48வது நிமிடத்தில் கேப்டன் கிலியன் எம்பாப்பே அற்புதமாக கோல் அடிக்க, உற்சாகமடைந்த பிரான்ஸ் அணிக்கு பிராட்லி பர்கோலா 54வது நிடமித்தில் அடுத்த கோல் போட்டு நம்பிக்கை அளித்தார்.

பிரான்சின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் இங்கிலாந்து வீரர்கள் அசந்து நிற்க, எம்பாப்பே 66வது நிமிடத்தில் தனது 2வது கோலை அடித்து அசத்தினார். 4-3 என இடைவெளி குறைந்ததால் இரு அணிகளும் மேற்கொண்டு கோல் அடிக்க முட்டி மோதின. இரு அணி வீரர்களும் சளைக்காமல் தாக்குதல் நடத்த… ஆட்டத்தில் அனல் பறந்தது.  87வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் துல்லியமாக கோல் அடித்த புகயோ சகா ஹாட்ரிக் சாதனை படைத்தார்.

இங்கிலாந்து 5-3 என மீண்டும் முன்னிலையை அதிகரித்தது. நேர விரயத்தை ஈடுகட்டுவதற்காக வழங்கப்பட்ட கூடுதல் நிமிடங்களில் பிரான்சின் உஸ்மான் டெம்பலே (90’+6’), இங்கிலாந்தின் ஜூட் பெல்லிங்காம் (90’+8’) கோல் அடித்தனர்.  விறுவிறுப்பான ஆட்டத்தின் முடிவில் இங்கிலாந்து 6-4 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்று வெண்கலப் பதக்கத்தை முத்தமிட்டது. கேப்டன் கிலியன் எம்பாபே 2 கோல் அடித்தும் பிரான்ஸ் அணியின் பரிதாப தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை.

ஹாட்ரிக் கோல் போட்டு அசத்திய புகயோ சகா ஆட்ட நாயகன் விருது பெற்றார். மற்றும் 1966ல் சொந்த மண்ணில் நடந்த தொடரில் உலக கோப்பையை வென்றிருந்தது இங்கிலாந்து அணி. தற்போது 3வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்று ஆறுதல் அடைந்துள்ளது. மற்றும் ஆட்டம் தொடங்கி 134வது விநாடியில் டெக்லான் ரைஸ் அடித்த கோல், உலக கோப்பை போட்டிகளில் இங்கிலாந்து அடித்த 2வது வேகமான கோலாக அமைந்தது.

முன்னதாக, 1982ல் பிரான்ஸ் அணிக்கு எதிராக இங்கிலாந்து நடுகள வீரர் பிரையன் ராப்சன் 28வது விநாடியில் கோல் அடித்து அசத்தியுள்ளார். மற்றும் இங்கிலாந்தில் பிறந்து பிரான்ஸ் அணிக்காக விளையாடும் மைகேல் ஓலிஸ், நடப்பு தொடரில் சக வீரர்கள் கோல் அடிக்க 7 முறை உதவி செய்து சாதனை படைத்துள்ளார். 1966ல் பிரேசில் நட்சத்திரம் பீலே படைத்த சாதனையை (6 அசிஸ்ட்) ஓலிஸ் முறியடித்துள்ளது குறிப்பி த்தக்கது.

மற்றும் நடப்பு தொடரில் பிரான்ஸ் கேப்டன் கிலியன் எம்பாப்பே 10 கோல் அடித்துள்ளார். 1954ல் ஹங்கேரியின் சாண்டோர் கோக்சிஸ் 11 கோல், 1958ல் பிரான்சின் ஜஸ்ட் ஃபோன்டெய்ன் 13 கோல் போட்டு முன்னிலை வகிக்கின்றனர்.  மற்றும் இந்த போட்டியுடன் பிரான்ஸ் அணி தலைமை பயிற்சியாளர் டிடியர் டெஸ்சாம்ப்ஸ் விடைபெறுகிறார்.

Related Stories: