பெங்களூரு: பெங்களூரு போதைப்பொருள் வழக்கில் நடிகை ஷ்ரத்தா கபூரின் சகோதரர் சித்தாந்த் கபூர் மீதான எஃப்ஐஆர்ஐ கர்நாடக உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.கடந்த 2022ம் ஆண்டு ஜூன் மாதம் பெங்களூருவில் நடந்த ஒரு விருந்து நிகழ்ச்சியில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக எழுந்த புகாரின் பேரில், பிரபல பாலிவுட் நடிகர் சக்தி கபூரின் மகனும், நடிகை ஷ்ரத்தா கபூரின் சகோதரருமான நடிகர் சித்தாந்த் கபூர் மற்றும் சிலரை பெங்களூரு போலீசார் கைது செய்தனர்.
அப்போது சித்தாந்த் கபூரிடம் இருந்து போதைப்பொருள் எதுவும் பறிமுதல் செய்யப்படாததால், அவரும் மற்றவர்களும் காவல் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்த சித்தாந்த் கபூர், தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி கடந்த 2022ம் ஆண்டு கர்நாடக உயர் நீதிமன்றத்தை அணுகினார்.
இந்த மனுவை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், தற்போது சித்தாந்த் கபூர் மீதான முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. உதவி இயக்குநராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய சித்தாந்த் கபூர், 2006ம் ஆண்டு வெளியான ‘பாகம் பாக்’, 2006ம் ஆண்டு வெளியான ‘சுப் சுப் கே’ மற்றும் 2007ம் ஆண்டு வெளியான ‘பூல் புலையா’ போன்ற படங்களில் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
