ஜந்தர் மந்தரில் 21 நாளாக தொடர் உண்ணாவிரதம் இருந்த சோனம் வாங்சுக்கை தூக்கிச் சென்றது போலீஸ்: மருத்துவமனையில் அனுமதி; டெல்லியில் பரபரப்பு

புதுடெல்லி: நீட் தேர்வு விவகாரத்தில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, டெல்லி ஜந்தர்மந்தரில் 21 நாட்களாக தொடர் உண்ணாவிரதம் இருந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக்கை போலீசார் பலவந்தமாக தூக்கிச் சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனால் போராட்ட களத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் பதவி விலகக் கோரி, இளைஞர்கள் தலைமையிலான கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக் (59) டெல்லி ஜந்தர்மந்தரில் கடந்த மாதம் 28ம் தேதி தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். இவருக்கு இளைஞர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து, போராட்டத்தில் பங்கேற்றனர். பல்வேறு அரசியல் கட்சிகளும் வான்சுங்க்கிற்கு ஆதரவு தெரிவித்ததால் நாளுக்கு நாள் போராட்டம் தீவிரமடைந்தது.

கடந்த 20 நாளாக உண்ணாவிரதம் இருந்த நிலையில் வான்சுக்கின் உடல் நிலை மோசமான கட்டத்தை எட்டியது. சுமார் 9.5 கிலோ உடல் எடை குறைந்த நிலையில், ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு அபாய கட்டத்தை எட்டியது. இதனால், வான்சுக்கின் உடல் நிலையை தொடர்ந்து மதிப்பீடு செய்யவும், தேவைப்பட்டால் அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. வான்சுக் உடல் நிலை அபாய கட்டத்தை எட்டியிருப்பதால் அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைத்திருந்தனர்.

இந்நிலையில், உண்ணாவிரத போராட்டத்தின் 21வது நாளான நேற்று காலை 7 மணி அளவில் சாதாரண உடையில் வந்த போலீசார் போராட்ட மேடைக்கு சென்று வான்சுக்கை நெருங்கினர். அதைத் தொடர்ந்து உடனடியாக போலீஸ் படை உள்ளே புகுந்து வெள்ளை நிற துணியால் மறைத்தபடி சோனம் வாங்சுக்கை குண்டுகட்டாக தூக்கிக் கொண்டு ஆம்புலன்சில் ஏற்றி டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போராட்ட களத்தில் இருந்த இளைஞர்கள் மனித சங்கிலி அமைத்து தடுக்க முயன்றதால் அங்கு கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசாரை தடுத்த பலர் குண்டுகட்டாக தூக்கி எறியப்பட்டனர். இதனால் சிலருக்கு காயம் ஏற்பட்டது.

அமைதியான முறையில் போராட்டம் நடத்திய வான்சுக்கை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்ற டெல்லி போலீசாரின் செயலுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. கரப்பான் பூச்சி கட்சியின் எக்ஸ் தளத்தில் வாங்சுக் போராட்ட களத்திலிருந்து வெள்ளை துணியால் போர்த்தப்பட்டு தூக்கிச் செல்லப்படும் வீடியோவை பதிவிட்டுள்ளது.

அதில், ‘‘20 நாள் உண்ணாவிரத போராட்டத்திற்கு பிறகு உடல் நலிவடைந்த முதியவரை டெல்லி காவல்துறை வெள்ளை துணியால் போர்த்தி தூக்கிச் சென்றுள்ளனர். இது தேசிய அவமானம்’’ என கூறப்பட்டுள்ளது.

டெல்லி துணை காவல் ஆணையர் சச்சின் சர்மா கூறுகையில், ‘‘வாங்சுக்கின் உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து, டெல்லி உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களுக்கு இணங்க அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தேவையான மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்’’ என்றார். மற்ற போராட்டக்காரர்களும் தங்கள் போராட்டத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என்றும், கூடிய விரைவில் அமைதியான முறையில் ஜந்தர்மந்தரை விட்டு வெளியேற வேண்டும் என்றும் காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. நாளை (20ம் தேதி) நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. அப்போது, வாங்சுக் போராட்டத்தின் ஒருபகுதியாக, அரசின் கவனத்தை ஈர்க்க நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்லப்படும் என கரப்பான் பூச்சி கட்சி அறிவித்திருந்தது.

எனவே நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பாக இப்போராட்டத்தை கலைக்கும் வகையில் வாங்சுக்கை டெல்லி போலீஸ் மருத்துவமனையில் அனுமதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மோடி பதவி விலக கோரி தீவிரமடைந்த போராட்டம்
சோனம் வாங்சுக் போராட்ட களத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட சிறிது நேரத்திலேயே, கரப்பான் பூச்சி கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்குவதாக அறிவித்தார். ‘‘நான் இப்போதே காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்குகிறேன்’’ என எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டார். திட்டமிட்டபடி நாளை நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தப்படும் என்பதையும் அவர் உறுதிப்படுத்தி உள்ளார். மற்றொரு பதிவில், ‘‘மோடி பதவி விலக வேண்டும்’’ என முழக்கமிட்டு கரப்பான் பூச்சி கட்சி தனது போராட்டத்தின் தீவிரதத்தை அதிகரித்துள்ளது. சோனம் வாங்சுங்குடன் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்ற அகில இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த 3 மாணவிகள் 21வது நாளாக நேற்றும் போராட்டத்தை தொடர்ந்தனர்.

நேரம் பார்த்து தூக்கிய போலீஸ்
வாங்சுக்கை போராட்ட களத்தில் இருந்து அப்புறப்படுத்த டெல்லி போலீசார் நேற்று முன்தினமே முடிவு செய்துள்ளனர். இதற்காக திட்டமிடப்பட்டு, ஒத்திகையும் செய்து பார்த்துள்ளனர். பொதுவாக காலை 7 மணி அளவில் போராட்ட களத்தில் இருப்பவர்கள் காலைக்கடன்களை முடிக்கச் செல்வது வழக்கம். அந்த சமயத்தை பயன்படுத்தி வாங்சுக்கை தூக்கி உள்ளனர். அவரை குண்டுகட்டாக தூக்கிச் செல்வதை வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பரப்பினால் இப்போராட்டம் மேலும் தீவிரமடையும் என்பதற்காக வீடியோ எடுக்க முடியாத படி போலீசார் மப்டியில் வந்து வெள்ளை துணியால் வாங்சுக்கை மூடியபடி தூக்கிச் சென்றுள்ளனர். அப்போது மொபைல் ஜாமர்களும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ராகுல் காந்தி கண்டனம்
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பதிவில், ‘‘மோடி அரசின் அடிப்படை கொள்கைகள் பொய் மற்றும் வன்முறை. அகிம்சை வழியில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சோனம் வாங்சுக்கை ஜந்தர் மந்தரிலிருந்து அகற்றியது தவறானது. இது நாட்டின் ஜனநாயகம், அரசியலமைப்பின் மீது விழுந்த கறை’’ என கூறி உள்ளார்.

அரசியலமைப்புக்கு ஏற்பட்ட களங்கம்: காங்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நேற்று தனது எக்ஸ் தளத்தில், ‘‘அன்னை கங்கையை காக்க 111 நாட்கள் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த பேராசிரியர் ஜி.டி. அகர்வால் ஆகட்டும், அரியானாவைச் சேர்ந்த ஒலிம்பிக் மல்யுத்த வீரர்கள் ஆகட்டும், நாட்டிற்கு உணவளிக்கும் 750 விவசாயிகள், தலித்துகள் மற்றும் பழங்குடியினர் ஆகட்டும், அல்லது தேர்வு வினாத்தாள் கசிவால் பாதிக்கப்பட்ட 25 இளைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஆகட்டும் – இந்த சர்வாதிகார அரசு யாரையும் விட்டுவைக்கவில்லை. அரசுக்கு எதிராக குரல் எழுப்பும் எவரும் தேசவிரோதி, ஒட்டுண்ணி என முத்திரை குத்தப்படுகின்றனர். இன்று ஜந்தர் மந்தரில் நடந்த நிகழ்வு நமது ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்புக்கு மற்றொரு களங்கமாகும்’’ என்றார்.

அபிஜித் தீப்கே மீது கருப்பு மை வீச்சு
ஜந்தர் மந்தரில் நேற்று பிற்பகலில் கரப்பான் பூச்சி கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கே போராட்ட குழுவினருடன் பேசிக் கொண்டிருந்த போது பெண் ஒருவர் கருப்பு மை போன்ற திரவத்தை அபிஜித் மீது வீசினார். இதனால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த பெண் யார், ஏன் அப்படி செய்தார் என்பது குறித்து தகவல் எதுவும் இல்லை. அவரை போலீசார் பிடித்து விசாரிக்கின்றனர்.

Related Stories: