சிறுநீரக செயலிழப்பு, ரத்தப்போக்கு அதிகரிப்பு பிரசவித்த தாய்க்கு ரத்தத்தை மாற்றி செலுத்தியதால் மரண போராட்டம்: ராஜஸ்தான் அரசு மருத்துவமனையில் அலட்சியம்

 

ஜோத்பூர்: ஜோத்பூரில் பிரசவத்திற்கு பின் தவறான ரத்தப் பிரிவு செலுத்தப்பட்டதால் இளம்பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டம் தவ்ரா பவுரி கிராமத்தைச் சேர்ந்த தபு பில் (24) என்ற பெண், கடந்த 11ம் தேதி ஒரு ஆண் குழந்தையை சுகப்பிரசவம் மூலம் பெற்றெடுத்த நிலையில், அவருக்கு ஏற்பட்ட கடுமையான ரத்த போக்கு மற்றும் பிரசவத்திற்கு பிந்தைய உடல்நலக் குறைவு காரணமாக அன்றைய தினமே உம்மெத் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவருக்கு முதலில் அவரது சொந்த ரத்தப் பிரிவான ஓ-பாசிட்டிவ் ரத்தம் முறையாக செலுத்தப்பட்ட நிலையில், 12ம் தேதி இரவு நடந்த இரண்டாவது ரத்த மாற்றத்தின் போது தவறுதலாக பி-பாசிட்டிவ் ரத்தம் செலுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் உடனடியாக தபு பில்லுக்கு கடுமையான நடுக்கம் ஏற்பட்டு, சிறுநீர் சேகரிப்புப் பையில் ரத்தம் வெளியேறியதுடன், அவரது உடல்நிலை வேகமாக மோசமடைந்து சிறுநீரக செயலிழப்பு மற்றும் ரத்தப்போக்கு ஏற்பட்டது.

இதையடுத்து, 13ம் தேதி அவர் மகாத்மா காந்தி மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். இதுகுறித்து மகாத்மா காந்தி மருத்துவமனை கண்காணிப்பாளர் ஃபதே சிங் கூறுகையில், ‘தவறான ரத்தம் செலுத்தப்பட்டதால் நோயாளியின் சிறுநீரகம் கடுமையாக பாதிக்கப்பட்டு சிறுநீர் வெளியேறுவது நின்றுவிட்டது; தற்போது அவர் தொடர் ரத்த சுத்திகரிப்பு சிகிச்சையில் உள்ளார், அவரது உடல்நிலை படிப்படியாக முன்னேறி வருகிறது மற்றும் அவர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்’ என்று தெரிவித்தார்.

ஆனால், தபு பில்லின் கணவர் கிஷ்ணாராம் கூறுகையில், ‘இரண்டாவது ரத்த மாற்றத்திற்குப் பின்பே உடல்நிலை மோசமடைந்தது, எங்களுக்கு தவறான ரத்தம் செலுத்தப்பட்டது குறித்து யாரும் தெரிவிக்கவில்லை’ என்று குற்றஞ்சாட்டியுள்ளார். இதற்கிடையே, உம்மெத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இரு பெண்களின் பெயர்களும், அவர்களின் கணவர்களின் பெயர்களும் ஒரே மாதிரியாக இருந்ததால் இந்த ரத்த மாற்று குழப்பம் நடந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் குறித்து எஸ்.என். மருத்துவக் கல்லூரி முதல்வர் பி.எஸ். ஜோதா கூறுகையில், ‘இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது, தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று உறுதியளித்தார்.

Related Stories: