விழுப்புரம்: தமிழகம் முழுவதும் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்துக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை அமைச்சர்கள் லஞ்சம் பெறுவதாக விழுப்புரத்தை சேர்ந்த தவெக பெண் வழக்கறிஞர் ஞானசவுந்தரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்களை நியமிப்பது தொடர்பாக தமிழக அரசு கடந்த ஜூன் 5ம் தேதி அறிவிப்பாணை வெளியிட்டது. அதன்படி, பட்டியல் இனத்தைச் சேர்ந்த நானும் தவெக வழக்கறிஞர் என்ற முறையில் விண்ணப்பித்தேன். ஆனால் அரசு வழக்கறிஞர்கள் நியமனம் தொடர்பான பட்டியல் சமூக வலைத்தளங்களில் பரவியது.
அந்தப் பட்டியலில் எனது பெயர் இல்லை என்பதையறிந்து அது தொடர்பாக தவெக மாவட்டச் செயலாளரிடம் முறையிட்டேன். இதுகுறித்து விசாரித்தபோது, அரசு வழக்கறிஞர்கள் நியமனத்துக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை தவெக அமைச்சர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் லஞ்சம் பெற்றிருப்பது தெரியவந்தது. எனவே, தமிழகம் முழுவதும் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் நடைபெறும் முறைகேடு தொடர்பாக விசாரித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். தகுதியானவர்களை இப்பதவிகளுக்கு நியமிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
என்னை விழுப்புரம் மாவட்டத்தில் அரசு வழக்கறிஞராக நியமிக்கவும், அதுவரை அரசு வழக்கறிஞர்கள் நியமனத்துக்கும், அது தொடர்பான அறிவிப்பாணைக்கும் தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தார். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 20 பேர் கொண்ட விழுப்புரம், வானூர், திண்டிவனம், செஞ்சி உள்ளிட்ட நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்கள் பட்டியல் வெளியானது. இதில் ஞானசவுந்தரியின் பெயர் இடம் பெறவில்லை. அதோடு நேற்றைய தினம் அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி மாவட்ட செயலாளர் மோகன்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், இணையவழி முறையின் மூலம் உறுப்பினராக இணைந்துள்ள ஞானசவுந்தரி எதிரிகளுடன் சேர்ந்து பொய்யான குற்றச்சாட்டுகள் கூறியும், கட்சியின் கொள்கைகள், ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு முரணாக செயல்பட்ட அவரை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து உடனடியாக நீக்கப்படுகிறார் என்று கூறப்பட்டுள்ளது. வழக்கு தொடர்ந்து பல நாட்களாகியும் கட்சி அவர் மீது நடவடிக்கை எடுக்காத நிலையில் அரசு வழக்கறிஞர் பட்டியல் வெளியான மறுநாளே கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
