புதுடெல்லி: வந்தே மாதரம் தேசியப் பாடலை அவமதிப்பவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கும் புதிய சட்ட திருத்த மசோதாவை ஒன்றிய அரசு கொண்டு வருகிறது.
ஒன்றிய அரசால் அங்கீகரிக்கப்பட்ட தேசியப் பாடலான வந்தே மாதரத்திற்கு தகுந்த மரியாதை அளிக்கப்படவில்லை என்றும், சில எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களிலும், சிறுபான்மையினர் நடத்தும் அமைப்புகளிலும் இப்ப பாடல் திட்டமிட்டே தவிர்க்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன.
இந்நிலையில், தேசியப் பாடலுக்கு சட்டப்பூர்வ பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தேசியப் பெருமதிப்பு அவமதிப்பு தடுப்பு (திருத்த) மசோதா, 2026ம் ஆண்டை கொண்டு வர ஒன்றிய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதா வரும் 20ம் தேதி முதல் ஆகஸ்ட் 13ம் தேதி வரை நடைபெறவுள்ள நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் அறிமுகம் செய்யப்பட்டு, விவாதத்திற்கு பின் நிறைவேற்றப்பட பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த புதிய திருத்த மசோதாவின்படி, வந்தே மாதரம் பாடலை பாடுவதை யாராவது வேண்டுமென்றே தடுத்தாலோ அல்லது அதற்கு இடையூறு விளைவித்தாலோ அவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.
இத்தண்டனை தற்போது தேசிய கீதம், தேசியக் கொடி மற்றும் அரசியலமைப்பை அவமதிப்போருக்கு வழங்கப்படும் தண்டனைக்கு இணையானதாகும். இச்சட்டத்தின் மூலம், வந்தே மாதரம் பாடலுக்கான மரியாதை என்பது வெறும் அறிவுறுத்தலாக இல்லாமல், சட்டப்படி கட்டாயமாக்கப்படுகிறது. இது குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதலில், ‘அரசு விழாக்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் வந்தே மாதரம் பாடலை பாடும் போது அனைவரும் எழுந்து நின்று அதற்குரிய மரியாதையை செலுத்த வேண்டும்’ என்று உத்தரவிடப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தவுடன் இதன் முழு விவரங்களும் பொதுவெளியில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
