மேற்கு வங்கம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் பள்ளி வாகனம் மீது ரயில் மோதியதில் 2 குழந்தைகள் உள்பட 3 பேர் உயிரிழப்பு..!!

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் பள்ளி வாகனம் மீது ரயில் மோதியதில் 2 குழந்தைகள் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். முர்ஷிதாபாத்தில் உள்ள கோவிந்த்பூர் ரயில்வே கிராசிங்கில், இன்று காலை 7 மணியளவில் பலர் அமரும் காரில் குழந்தைகள் பள்ளி சென்று கொண்டிருந்தனர். அப்போது திறந்திருந்த ரயில் தண்டவாளத்தை வாகனம் கடக்க முயன்றபோது புறநகர் ரயில் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்தது.

இந்த விபத்தில் 3 பள்ளி மாணவர்களும், உள்ளூர் நபர் ஒருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஓட்டுநர் மற்றும் 4 மாணவர்கள் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தை நேரில் கண்ட உள்ளூர் மக்கள் கூறுவதாவது; ஹவுரா நோக்கிச் சென்ற நவத்வீப் எக்ஸ்பிரஸ் ரயில் கடந்து சென்ற பிறகும் ரயில்வே கேட் மூடப்படாமல் திறந்த நிலையிலேயே இருந்தது.

கேட் திறந்திருந்ததால் பள்ளி குழந்தைகளை ஏற்றிச் சென்ற காரும், மிதிவண்டியில் ஒருவரும் தண்டவாளத்தைக் கடக்க முயன்றனர். அப்போது அவ்வழியாக வந்த புறநகர் ரயில் மோதி விபத்து ஏற்பட்டது என்றனர். காயமடைந்தவர்களுக்கு உள்ளூர் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர், முர்ஷிதாபாத் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து தொடர்பாக ரயில்வே காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: