சென்னை: மாம்பாக்கம் ஊராட்சி மன்றத்தில் சாலைப்பணிக்கு லஞ்சம் வாங்கிய புகாரில் சிக்கிய தவெக ஊராட்சி தலைவர் வீரா (எ) வீராசாமி கைது செய்யப்பட்டார்.கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டார். திருப்போரூர் ஒன்றியம், மாம்பாக்கம் ஊராட்சி தலைவர் வீரா தவெக கிழக்கு மாவட்ட இணை செயலாளராக உள்ளார். மாம்பாக்கம் ஊராட்சி மன்றத்தில் சாலைப்பணிகளை மேற்கொண்ட நவீன் என்ற ஒப்பந்ததாரர், ஒப்பந்தம் பெற்று பணிகளையும் முடித்துவிட்ட நிலையில், அவருக்கு உரிய தொகை வழங்கப்படவில்லை. இதையடுத்து மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் வீராவை அணுகியதில், அவர் ரூ.1.30 லட்சம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஒப்பந்ததாரர் நவீன், 1 லட்சம் ரூபாயை மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவருக்கு ஜிபே மூலம்அனுப்பி உள்ளார்.
மீதி கொடுக்க வேண்டிய 30 ஆயிரம் ரூபாயை நவீன் நேரடியாகச் சென்று, அவரது அலுவலகத்தில் வழங்கி உள்ளார். இதை நவீன், செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் கசிய விட்டார். இதுகுறித்து மாம்பாக்கம் ஊராட்சி தலைவர் வீரா நேற்று நிருபர்களுக்கு விளக்கம் அளித்தார். ‘‘எனக்கு காசோலையில் கையெழுத்திடும் அதிகாரம் இன்னும் வழங்கப்படவில்லை. அந்த ஒப்பந்ததாரர் எனது நண்பர்தான். அவரிடம் கடன் கொடுத்து இருந்தேன். அந்த பணத்தைத்தான் திருப்பிக் கொடுத்தார். அதைத்தான் வாங்கி எனது மனைவியிடம் கொடுத்தேன். ஒன்றிய அலுவலகத்தில் பில் பாஸ் செய்யவில்லை என்று ஒரு கோரிக்கையை சொன்னார்.
அதை நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்தேன். இதில் வேறொன்றும் இல்லை. லஞ்சப் பணத்தை யாராவது மொபைல் செயலி மூலம் வாங்குவார்களா? நான் கடனாக கொடுத்த பணத்தைதான் அப்படி வாங்கினேன். என்னை அரசியலில் இருந்து வீழ்த்துவதற்காக அரசியல் எதிரிகள் செய்யும் சதியாகத்தான் இதை பார்க்கிறேன்’ என்றார். இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் இந்த வீடியோ வேகமாக பரவியதை அடுத்து, செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட தவெக செயலாளர் தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘கட்சியின் கொள்கை கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்டதால் மாவட்ட இணைச் செயலாளர் வீரா (எ) வீராசாமி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுகிறார்’’ என அறிவித்துள்ளார்.
இந்நிலையில், ஒப்பந்ததாரர் நவீன் தாழம்பூர் காவல் நிலையத்தில் வீரா தன்னை மிரட்டி பணம் கேட்டது தொடர்பாக புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் துணை ஆணையர் ரகுபதி உத்தரவின் பேரில் ஆய்வாளர் பிரவீன் ராஜேஷ் தலைமையில் உதவி ஆய்வாளர் சுரேஷ் ஆகியோர் வீராவை கைது செய்தனர். பின்னர் திருப்போரூர் நீதிமன்றத்தில் வீராளை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
