சென்னை: தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக பணீந்திர ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக பதவி வகித்த கே.ஞானதேசிகன் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து முன்னாள் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனாவை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
இந்தநிலையில் சிவ்தாஸ் மீனா மற்றும் அதன் உறுப்பினர்களான டாக்டர் எல்.சுப்ரமணியன், சுகுமார் சிட்டிபாபு, எம்.கிருஷ்ணமூர்த்தி, டாக்டர் டி.ஜெகந்நாதன் ஆகியோர் ஒட்டுமொத்தமாக பதவி விலகினர். இதையடுத்து தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் சட்டம், 2016வது பிரிவு 82ன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி ஆணையத்தை தற்காலிகமாக கலைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது.
இந்த நிலையில், தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் அதிகாரங்களையும், பொறுப்புகளையும் கவனிப்பதற்காக 3 பேர் கொண்ட புதிய இடைக்கால குழுவை நியமித்து தமிழ்நாடு அரசு நேற்று அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி கே.பணீந்திர ரெட்டி தலைமையில் ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி ஏ.நசீர் அகமது, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ரீட்டா ஹரிஷ் தக்கர் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த 3 பேர் குழு 6 மாதங்களுக்கோ அல்லது புதிய ஆணையம் அமைக்கப்படும் வரை, எது முன்னதாக நிகழ்கிறதோ அதுவரை செயல்படும். ரியல் எஸ்டேட் துறையில் ஒழுங்குமுறை நடவடிக்கைகள் மற்றும் மக்களுக்கு வழங்கப்படும் சேவைகளில் இடையூறு ஏற்படாமல் பாதுகாக்க இந் நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசு கூறியுள்ளது. கே.பணீந்திர ரெட்டி, அறநிலையத்துறை ஆணையர், வருவாய் நிர்வாக ஆணையர், உள்துறை செயலாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
