சென்னை – பெங்களூரு இடையே பூமிக்கடியில் புல்லட் ரயில் இயக்க திட்டம்: விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க புதிய டெண்டர்

சென்னை: சென்னை – பெங்களூரு புல்லட் ரயில் திட்டம் பூமிக்கடியில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை மற்றும் பெங்களூரு இடையே அதிவேக புல்லட் ரயில் இயக்குவதற்கான திட்டப் பணிகள் அடுத்த முக்கிய கட்டத்தை எட்டியுள்ளன. இத்திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை புதுப்பிக்கவும், புதிய பொறியியல் ஆய்வுகளை மேற்கொள்ளவும் தேசிய அதிவேக ரயில் கழகம் புதிய டெண்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே 2024 செப்டம்பர் மாதத்தில் சென்னை- பெங்களூரு- மைசூரு வழித்தட புல்லட் ரயில் திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதில், சென்னை- பெங்களூரு இடையேயான பகுதிக்கு முதல் முன்னுரிமை அளிக்கப்பட்டு தற்போது பணிகள் துவங்கப்பட்டுள்ளன. புதிதாக கோரப்பட்டுள்ள இந்த டெண்டர் மூலம், அடுத்த 150 நாட்களுக்குள் நில அளவை, மண் பரிசோதனை மற்றும் வழித்தட மறுஆய்வுப் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், புல்லட் ரயில் பாதை செல்லும் வழியில் உள்ள கூவம், பாலாறு போன்ற முக்கிய ஆறுகளைக் கடக்கும்போது எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க விரிவான வெள்ள அபாய மற்றும் நீரியல் ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட உள்ளன. பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ் மற்றும் ஐ.சி.எப் ரயில் பெட்டி தொழிற்சாலை பகுதிகளை கடக்கும் இடங்களில் மேம்பால ரயில் பாதைகளை வடிவமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக பொதுப்பணித்துறை, சென்னை குடிநீர் வாரியம் மற்றும் பிற உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்து தேவையான தரவுகள் சேகரிக்கப்பட்டு, புதிய நில அளவைப் படங்களும், தேவைப்பட்டால் புதிய நிலக் கையகப்படுத்துதல் திட்டங்களும் தயாரிக்கப்பட உள்ளன என்று தகவல் வெளியாகியுள்ளது. பரந்தூரில் அமையவிருந்த புதிய பசுமைவழி விமான நிலைய திட்டத்தை கைவிட மாநில அரசு முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படும் நிலையிலும், சென்னை- பெங்களூரு இடையேயான 306.2 கி.மீ நீள புல்லட் ரயில் பாதையில் பரந்தூர் ரயில் நிலையம் தொடர்ந்து தக்கவைக்கப்பட்டுள்ளது.

இந்த புல்லட் ரயில் பாதை சென்னை, பூந்தமல்லி, பரந்தூர் சித்தூர், பங்காருபாலம் கோலார், மாலூர், ஒயிட்பீல்டு, பெங்களூரு ஆகிய ஊர்களை இணைக்கும் என கூறப்படுகிறது. குறிப்பாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அருகில் பூமிக்கு அடியில் சுரங்கப்பாதையாக அமைக்கப்படும். இது சென்னை மெட்ரோ ரயிலுடன் இணைக்கப்பட்டு பயணிகள் எளிதாக மாற வழிவகை செய்யப்படும். அதே போல் பூந்தமல்லி (மேம்பாலம்) தேசிய நெடுஞ்சாலை-4ன் வடக்கு பகுதியில் மேம்பால நிலையமாக அமைக்கப்பட உள்ளது.

இது வெளிவட்ட சாலை, மெட்ரோ ரயில் 2ம் கட்டப் பணிகள், சென்னை விமான நிலையம் ஆகியவற்றுடன் இணைக்கப்படும். பரந்தூர் (மேம்பாலம்) முன்மொழியப்பட்ட விமான நிலைய பகுதியின் தெற்கு பக்கத்தில் மேம்பால நிலையமாக அமையும். இது சென்னை- பெங்களூரு விரைவுச்சாலை மற்றும் என்.எச்-48 உடன் இணைப்புச் சாலைகள் மூலம் இணைக்கப்படும், என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: