வாக்காளர்களுக்கு பிரிட்ஜ் வாங்க கூப்பன் வழங்கி முறைகேடு; சி.விஜயபாஸ்கர் வெற்றியை செல்லாது என அறிவிக்க கோரி வழக்கு: தேர்தல் ஆணையம் பதில் தர ஐகோர்ட் உத்தரவு

 

சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலில் விராலிமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்ட சி.விஜயபாஸ்கர்1,05,773 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தவெக வேட்பாளர் முருகேசனை விட 62,073 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். இந்த நிலையில் திமுக சார்பில் போட்டியிட்ட தோல்வியுற்ற கே.கே. செல்லப்பாண்டியன், சென்னை உயர்நீதிமன்றத்தில் சி. விஜயபாஸ்கர் வெற்றி பெற்றதை எதிர்த்து தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளார். அவரது மனுவில், வெற்றி பெற்ற சி.விஜயபாஸ்கர் தேர்தல் பிரசாரத்தின் போது வாக்காளர்கள் தனக்கு ஆதரவாக வாக்களிப்பதற்காக 10,000 ரூபாய் மற்றும் 2,000 ரூபாய்க்கான கூப்பன்களை விநியோகித்தார்.

வாக்காளர்கள் அந்த கூப்பன் மூலம் பிரிட்ஜ் வாங்கிக் கொள்ளலாம் என்று கூறி தேர்தல் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார். எனவே சி. விஜயபாஸ்கர் வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி என்.செந்தில்குமார், வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டு கூப்பன்களை வழங்கி முறைகேட்டில் ஈடுபட்டதை மனுதாரர் சுட்டிக்காட்டியதை பதிவு செய்தார். மேலும் வழக்கு குறித்து சி. விஜயபாஸ்கர் மற்றும் தேர்தல் ஆணையம் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மூன்று வாரத்திற்கு தள்ளி வைத்துள்ளார். ஏற்கனவே அதிமுகவில் இருந்து 6 பேர் ராஜினாமா செய்து, தவெகவில் இணைந்துள்ளனர்.

அதில், விஜயபாஸ்கரும் ஒருவர். இந்தநிலையில் 6 பேரில் 4 தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால் அதிமுகவில் இருந்து தவெகவுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்து விட்டது. இந்தநிலையில், விஜயபாஸ்கருக்கு மேலும் ஒரு சிக்கல் தற்போது இந்த வழக்கின் மூலம் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: