சென்னை: காமராஜரின் 124வது பிறந்தநாளை முன்னிட்டு, பல்லவன் சாலையில் உள்ள அவரது சிலைக்கு திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: வேளச்சேரி பாலம் உட்பட பல்வேறு திட்டங்களுக்கான டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அனைத்து விரும்ப தகாத நிகழ்வுகளையும் சட்டமன்றத்தில் மானிய கோரிக்கை நடைபெறும் போது எடுத்துரைப்போம். சென்னை மாநகராட்சி மேற்கொண்ட ரூ.800 கோடிக்கும் மேலான வளர்ச்சி திட்ட பணிகளை தவெக அரசு ரத்து செய்துள்ளது.வடசென்னை வளர்ச்சி திட்டத்தை முழுமையாக இன்றைக்கு முடக்கி வைத்துள்ளனர்.
இந்த திட்டங்களையும் நிதி நெருக்கடி என்று காரணம் காட்டி முடக்கியுள்ளனர். கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் அனைத்தும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் புகழுக்கு புகழ் சேர்க்கும் என்ற காரணத்தால் நூலங்கள், படைப்பகங்கள், விளையாட்டு மைதானங்கள், பூங்காக்கள், கழிவுநீர் அகற்றும் நிலையங்கள், தடையின்றி வழங்கப்பட இருக்கின்ற மின்சாரங்கள் என இப்படிப்பட்ட பணிகள் அனைத்திற்கும் தடையை ஏற்படுத்தியுள்ளனர். திமுக கொண்டு வந்த திட்டங்களின் பெயர்களை மாற்றுவது தவெக அரசின் காழ்புணர்ச்சியை காட்டுகிறது. மக்கள் அனைத்தையும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். உதாரணத்துக்கு, மயிலடி பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த கல்வெட்டு உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக இருந்த போது திறக்கப்பட்ட கல்வெட்டு.
அந்த கல்வெட்டை 2 நாட்களுக்கு முன்பு அகற்றியுள்ளனர். அதேபோன்று ராயபுரம் மண்டலம்-5ல் எதிரில் இருக்கின்ற முதல்வர் திருமண மாளிகையில் பதிக்கப்பட்டிருந்த 2 கல்வெட்டுகளையும் அகற்றியுள்ளனர். இப்படி கல்வெட்டுகளை அகற்றுவதால் மு.க.ஸ்டாலினின் புகழ் மற்றும் பணிகளை எந்நாளும் மறைக்க முடியாது. கல்வெட்டுகளை வேண்டுமானால் அகற்றலாம் மக்களின் இதய சிம்மாசத்தில் குடியிருக்கிற மு.க.ஸ்டாலின் பெயரை எதை வைத்து அகற்றுவார்கள், எதை வைத்து நீக்குவார்கள். எனவே அவர்களின் காழ்புணர்ச்சியை மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். அவர்களுக்கு தகுந்த பாடத்தை மக்கள் விரைவில் கற்பிப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
