எனக்கு மடியில் கனமில்லை.. வழியில் பயமில்லை.. நீதிமன்ற ஆணைப்படி விசாரணைக்கு ஆஜரானேன்: 5 மணி நேரம் விசாரணைக்கு பிறகு எ.வ.வேலு பேட்டி

 

சென்னை: கரூர் மாவட்டத்தில் மாநில ெநடுஞ்சாலைத்துறை சார்பில் போடப்படாத சாலைக்கு ரூ.3.23 கோடி நிதி ஒதுக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின்படி கடந்த மாதம் லஞ்ச ஒழிப்புத்துறை, முன்னாள் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் உள்ளிட்ட 9 அரசு ஊழியர்கள் மற்றும் ஒப்பந்ததார் மீது வழக்கு பதிவு செய்தது. அதைதொடர்ந்து கடந்த 25ம் ேததி, முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு உட்பட மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வீடு மற்றும் ஒப்பந்ததார் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. சென்னையில் 4 இடங்கள், திருவண்ணாமலையில் 4 இடங்கள், கரூரில் 7 இடங்கள், திண்டுக்கல், கோவை தலா 2 இடங்கள், திருப்பூரில் ஒரு இடம் என மொத்தம் 20 இடங்களில் சோதனை நடந்தது.

இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.40 லட்சம் ரொக்கம், வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்கள், மின்னணு ஆதராங்கள் சிக்கியது. இதுதொடர்பாக விளக்கம் அளிக்க முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பியது. அந்த சம்மனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு நேற்று காலை 10.45 மணிக்கு சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை தலைமை அலுவலகத்தில், விசாரணை அதிகாரிகள் முன்பு நேரில் ஆஜரானார். அவரிடம் வழக்கு தொடர்பாகவும், சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் படி, அதிகாரிகள் மாலை 4 மணி வரை விசாரணை நடத்தினர். அப்போது முன்னாள் அமைச்சர் அளித்த பதிலை வாக்குமூலமாக அதிகாரிகள் பதிவு செய்து கொண்டனர்.

பின்னர் 5 மணி நேரம் விசாரணை முடிந்து, முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களிடம் கூறியதாவது: ‘என்னுடைய சிங்கப்பூர் மருத்துவ பரிசோதனைக்கு பின்னால், அன்றைக்கு விமான நிலையத்தில் சொன்னேன். காவல்துறை அழைக்கிற போது நான் கட்டாயம் செல்வேன் என்று. அதேநேரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் காவல்துறைக்கு நீங்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று ஆணையிட்டது. அதன் அடிப்படையில் காவல்துறையை சேர்ந்த கூடுதல் எஸ்பி இன்று நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் வழங்கினார். அதன்படி நான் 10.45 மணிக்கு லஞ்ச ஒழிப்புத்துறை வளாகத்திற்கு வந்தேன். விசாரணை அதிகாரி என்னிடம் 11 மணிக்கு விசாரணையை தொடங்கினார்கள்.

தற்போது நான் வெளியே வரும் வரை விசாரணை மேற்கொண்டார்கள். பல்வேறு கேள்விகளை கேட்டனர். உண்மைகளை நான் அவர்களிடம் பதில் அளித்து இருக்கிறேன். மீண்டும் சொல்கிறேன். எனக்கு மடியில் கனமில்லை… வழியில் பயமில்லை… ஏன் என்றால் நான் எந்த வித குற்றமும் செய்யாதவன். அரசாங்கம் என்னை திட்டமிட்டு என்னை இணைத்துள்ளனர். நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது என்பதால், இதற்கு மேல் நான் எதையும் சொல்ல முடியாது. வரும் 28ம் தேதி இந்த வழக்கு நீதிமன்றத்தில் வரவுள்ளது. நீதிமன்றத்தில் நான் நீதியை எதிர்பார்த்து இருக்கிறேன்.

ஆட்சி மாறினாலும், அதே காவல்துறையினர் தான் தற்போதும் பணிபுரிகின்றனர். எனவே, காவல்துறை மீது நான் வருத்தப்படுவது அவசியம் இல்லை. காரணம், அவர்கள் முறைப்படி விசாரணை செய்தார்கள். நான் முறைப்படி பதில் சொல்லி இருக்கிறேன். இவ்வாறு பேசினார்.

Related Stories: