சென்னை: நாமக்கல், திருப்பூர், திருவள்ளூர் மருத்துவ கல்லூரிகளுக்கு தலா 50 இளங்கலை மருத்துவ இடங்கள் கூடுதலாக ஒதுக்கீடு செய்யபப்ட்டுள்ளது. தேசிய மருத்துவ ஆணையத்தில் மருத்துவ மதிப்பீட்டு மற்றும் தரவரிசை வாரியம் நாமக்கல், திருப்பூர், திருவள்ளூர் மருத்துவ கல்லூரிகளுக்கு ஏற்கனவே உள்ள மருத்துவ இடங்களுடன் தலா 50 இளங்கலை மருத்துவ இடங்களை கூடுதலாக வழங்கியுள்ளது. மாநில சுகாதாரத்துறையின் தீவிர உள்கட்டமைப்பு விரிவாக்கம், சரியான நேரத்தில் சமர்பிக்கப்பட்ட விதிமுறை விளக்க அறிக்கைகள் ஆகியவற்றின் மூலம் தமிழகத்தில் இதுவரை மருத்துவ இடங்களின் எண்ணிக்கை 37 அரசு மருத்துவ கல்லூரிகளில் மொத்தமாக 5,200 ஆக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
மருத்துவ உள்கட்டமைப்பு, ஆசிரியர்களின் எண்ணிக்கை, மருத்துவ வசதிகளை மேம்படுத்துவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளை இந்த விரிவாக்கம் பிரதிபலிப்பதாகவும், நாட்டின் முதன்மையான சுகாதார மருத்துவ கல்வி மையமாக தமிழ்நாடு நிலைமையை தக்கவைத்துக் கொள்வதில் முதல்வர் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாகவும், அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த கல்வியாண்டில் வரவிருக்கும் மாநில கலந்தாய்வு செயல்முறையில் 150 இடங்களை கூடுதலாக சுமூகமாக ஒருங்கிணைக்க மருத்துவ கல்வி இயக்குநருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மருத்துவ கல்லூரியிலும் மாணவர் சேர்க்கையானது இறுதி செய்யப்பட்ட தேசிய மருத்துவ இட ஒதுக்கீடு பட்டியைலை பின்பற்றி நடைபெறும் எனவும் மருத்துவ துறை இது தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளது.
