ரயில் நிலையங்களில் விநாயகர் சதுர்த்தி விடுமுறை முன்பதிவுகள் விறுவிறுப்பு

 

நெல்லை, ஜூலை 15: விநாயகர் பிறந்த நாளான விநாயகர் சதுர்த்தி பண்டிகை இவ்வாண்டு வரும் செப்டம்பர் மாதம் 14ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அதற்கு முந்தைய சனி, ஞாயிற்று கிழமைகள் விடுமுறை தினங்களாகும். எனவே 3 தினங்கள் விடுமுறை என்பதால், தென்மாவட்ட பயணிகள் பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆர்வத்தில் உள்ளனர். விநாயகர் சதுர்த்தி விடுமுறைக்காக செப்டம்பர் 12ம் தேதி சனிக்கிழமையன்று ஊருக்கு புறப்பட்டு வருவோர் நேற்று (14ம் தேதி) ரயில்களில் முன்பதிவுகளை தொடங்கினர். இதனால் ரயில் நிலையங்களில் முன்பதிவு மையங்களில் ஓரளவுக்கு கூட்டம் காணப்பட்டது.

விநாயகர் சதுர்த்திக்கு முந்தைய தினம் செப்டம்பர் 13ம் தேதியன்று, வெளியிடங்களில் இருந்து சொந்த ஊருக்கு புறப்பட்டு வருவோர், இன்று (15ம் தேதி) முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களும் இயக்கவுள்ள நிலையில், பயணிகள் 3 நாட்கள் விடுமுறையில் ஊருக்கு திரும்பிட ஆயத்த பணிகளில் இறங்கியுள்ளனர். இதற்காக தென்மாவட்டங்களுக்கு வரும் ரயில்களான நெல்லை எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி, அனந்தபுரி, செந்தூர், முத்துநகர், பொதிகை உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரயில்களில் இப்போது முன்பதிவுகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இன்றும் முன்பதிவுகள் களைக்கட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மறுமார்க்கமாக செப்டம்பர் 14ம் தேதி விநாயகர் சதுர்த்தியை கொண்டாடிவிட்டு, அன்றைய தினமே சென்னைக்கு திரும்புவோர் நாளை 16ம் தேதி முன்பதிவுகளை மேற்கொள்ள தெற்கு ரயில்வே கேட்டுக் கொண்டுள்ளது.

 

Related Stories: