இங்கிலாந்திடம் வீழ்ந்தது நார்வே

மயாமி: பிபா உலக கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதியில், நார்வே அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய இங்கிலாந்து அரையிறுதிக்கு முன்னேறியது. மயாமி அரங்கில் நடந்த இப்போட்டியின் 36வது நிமிடத்தில் ஆண்ட்ரியாஸ் ஷ்ஜெல்டெரப் அபாரமாக கோல் அடிக்க, நார்வே அணி 1-0 என முன்னிலை பெற்றது. முதல் பாதி ஆட்டம் முடிவதற்கு சில விநாடிகளே இருந்த நிலையில் இங்கிலாந்தின் ஜூட் பெல்லிங்காம் (45’+2’) பதில் கோல் அடிக்க இடைவேளையின்போது 1-1 என சமநிலை நிலவியது.

இரண்டாவது பாதியில் இரு அணிகளும் தற்காப்பு ஆட்டத்தில் மிகக் கவனமாக இருந்ததால் மேற்கொண்டு கோல் ஏதும் விழவில்லை. நார்வே நட்சத்திர வீரர் எர்லிங் ஹாலண்டுக்கு சக வீரர்கள் பந்தை சரியாக பாஸ் செய்யாமல் வாய்ப்புகளை வீணடிக்க, அவர் விரக்தியுடன் களத்தில் செய்வதறியாது விழித்தார். ஆட்டம் கூடுதல் நேரத்துக்கு சென்ற நிலையில், ஜூட் பெல்லிங்காம் (93வது நிமிடம்) தனது 2வது கோலை போட்டு இங்கிலாந்துக்கு 2-1 என முன்னிலை கொடுத்தார்.

ஒரு கட்டத்தில் ஹாலண்ட் வெளியே அழைக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஜோர்கன் லார்சன் களமிறக்கப்பட்டார். இங்கிலாந்து தரப்பிலும் பெல்லிங்காமுக்கு மாற்று வீரராக டான் பர்ன் உள்ளே வந்தார். கடைசி கட்டத்தில் இரு அணிகளும் மாறி மாறி கோல் அடிக்கும் முயற்சியில் மல்லுக்கட்ட ஆட்டத்தில் அனல் பறந்தது.

இறுதியில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றியை வசப்படுத்தி அரையிறுதிக்கு முன்னேறியது. 2 கோல் போட்டு அசத்திய ஜூட் பெல்லிங்காம் ஆட்ட நாயகன் விருது பெற்றார். மற்றும் இங்கிலாந்து தரப்பில் 14 கோல் முயற்சிகளும், நார்வே தரப்பில் 13 கோல் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. மற்றும் இங்கிலாந்தின் 7 ஷாட்கள் இலக்கு நோக்கி துல்லியமாக இருந்த நிலையில், நார்வேயின் 4 ஷாட்கள் இங்கிலாந்து கோல் கீப்பரை சோதித்தன.

Related Stories: