அதிகளவில் பாதிக்கும் தொழிலாளர்கள்; இந்தியாவில் 76% பேருக்கு தொழில்சார் மனஅழுத்தம்: உளவியல் நிபுணர்கள் அதிர்ச்சி தகவல்

இயந்திரமயமாகி விட்ட இன்றைய வாழ்க்கைச்சூழலில் பதற்றமும், பரபரப்பும் மனிதர்களை தொட்டு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இது ஒரு கட்டத்தில் மனஅழுத்தமாகவும் மாறிவிடுகிறது. இந்த மனஅழுத்தம் என்பது வேலைப்பளு, நிதிக்கவலைகள், உறவுச்சிக்கல்கள் மற்றும் உடல்நல பிரச்னைகளால் ஏற்படுகிறது. மனஅழுத்தம் என்பது வெளிப்புறம் அல்லது உட்புற தேவைக்கான உடலின் எதிர்வினையாகும். இந்த மனஅழுத்தம் என்பது சமீபகாலமாக தொழில்சார்ந்த வேலைப்பளுவால் அதிகளவில் நிகழ்வதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளது.

தொழில் சார்ந்த மனஅழுத்தம் என்பது உலகம் முழுவதும் உள்ளது. சர்வதேச அளவில் 65சதவீதம் தொழிலாளர்கள் மனஅழுத்த பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர். சிலநாடுகளில் இது பெரும்பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. இந்தியர்களை பொறுத்தவரை 49சதவீதம் பேர், மனஅழுத்த பாதிப்புகளை எதிர்கொள்கின்றனர். இதில் 76சதவீதம் பேருக்கு, தொழில்சார்ந்த மனஅழுத்த பாதிப்புகள் உள்ளது. இதனால் தொழிலாளர்கள், அவர்களது செயல்திறனில் எதிர்மறையான விளைவுளை சந்திக்கின்றனர் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனஅழுத்தம் என்பது மனிதர்களுக்கு இயல்பாக நிகழும் ஒன்று தான். மனிதர்களுக்கு உணர்ச்சிகள் அதிகமாவதும், சிலநேரங்களில் உணர்ச்சியற்று இருப்பதும் ஏதாவது ஒரு சூழலில் நிகழ்கிறது. இதற்கு சுற்றுப்புறம், உடல்நிலை, வேலைப்பளு என்று பல்வேறு காரணங்கள் உள்ளது. இதில் தொழில் சார்ந்த மனஅழுத்தம் என்பது ஒருவரின் வேலை தொடர்பான உளவியல் அழுத்தமாகும். இது ஒரு நாள்பட்ட நிலையை குறிக்கிறது. வேலையில் உள்ள மனஅழுத்த சூழல்கள் என்ன? என்பதை முதலில் புரிந்து கொள்ளவேண்டும். அந்த நிலைகளை சரிசெய்ய நடவடிக்கை எடுப்பதன் மூலம் தொழில் சார்ந்த மனஅழுத்தத்தை போக்க முடியும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.

இது குறித்து மனநலம் சார்ந்த உளவியல் நிபுணர்கள் கூறியதாவது: இந்தியாவை பொறுத்தவரை உழைக்கும் மக்கள் அதிகம் வாழும் நாடாக உள்ளது. இந்திய மக்கள் தொகையில் 65 கோடி பேர் 20 முதல் 65 வயதுக்கு உட்பட்டவர்கள். இவர்கள் அனைவரும் தங்களின் கல்வி, வயது, உடல் தகுதிக்கு ஏற்ற ஏதேனும் ஒரு ெதாழிலில் ஈடுபடுபவர்களாக உள்ளனர். வேலையில்லா திண்டாட்டம் ஒரு புறம் இருந்தாலும் கிடைக்கும் வேலைகளை செய்து பிழைப்போரும் இங்கு கணிசமாக உள்ளனர். இது போன்றவர்களுக்கு பணியிடத்தில் ஏற்படும் ஒரு பிரச்னை தான் தொழில் சார்ந்த மனஅழுத்தம். இது பல்வேறு வழிகளில் வெளிப்பட்டு மனிதர்களை வெகுவாக பாதிக்கிறது. உதாரணமாக ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் அதிகப்படியான வேலைகளை சுமக்க வேண்டிய சூழல் அல்லது நிர்ப்பந்தம் என்பது இதில் பிரதானமாக உள்ளது. இது தொழிலாளி தொடங்கி உயரதிகாரி வரை உள்ளது. இதுபோன்ற சூழலில் தான் அதிகளவில் மனஅழுத்தம், தற்போது மனிதர்களை பாதிக்கிறது. அதிக எடையை தூக்குவது, நீண்டநேரம் நின்று கொண்டே இருப்பது, கடுமையான சுற்றுச்சூழல் போன்றவையும் அதிகளவில் தொழில்சார்ந்த மனஅழுத்தங்களை ஏற்படுத்துகிறது.

இவை அனைத்திற்கும் மேலாக அதிகளவிலான அறிவாற்றல் ஈடுபாடு, நிலையான முடிவெடுத்தல், சிக்கலை தீர்ப்பது போன்ற பணிகளும் பெருமளவில் மனஅழுத்தத்தை ஏற்படுத்தி வருவதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளது. மொத்தத்தில் எந்த வேலையில் இருந்தாலும், உயர்ந்த பொறுப்பில் இருந்தாலும் தொழில் சார்ந்த உழைப்பும், அர்ப்பணிப்பும் அனைவருக்கும் அவசியமாக உள்ளது. இதில் உழைப்பு என்பது உடலும், மனமும் இணைந்து செய்யும் ஒன்றாகும். இந்த இரண்டில் ஒன்று வேறுபட்டாலும் ஒருவரின் செயல்திறன் மாறிவிடும். தொழில் சார்ந்த மனஅழுத்தம் என்பது அலுவலக கடமைகள், பணிச்சூழல் மற்றும் பலதரப்பட்ட வேலைகள் காரணமாக ஏற்படுகிறது. இது உளவியல் ரீதியாக உடல்நலம் மற்றும் மனநலம் சார்ந்த பாதிப்புகளுக்கும் வழிவகுத்து விடும். எனவே வேலையில் உள்ள மனஅழுத்த சூழல்கள் என்ன? என்பதை முதலில் புரிந்து கொள்ளவேண்டும். அந்த நிலைகளை சரிசெய்ய நடவடிக்கை எடுப்பதன் மூலம் தொழில் சார்ந்த மனஅழுத்தத்தை போக்க முடியும். இவ்வாறு உளவியல் நிபுணர்கள் தெரிவித்தனர்.

தெளிவான மனமே ஆரோக்கியத்தின் வழி;
‘‘மனஆரோக்கியம் இல்லாமல் உடல் ஆரோக்கியம் என்பது நிச்சயமாக சாத்தியமில்லை. ஒருவரின் மூளையில் சுரக்கும் ரசாயனங்களே உடலின் கோடிக்கணக்கான உயிர்செல்கள் எப்படி இயங்க வேண்டும் என்பதை தீர்மானிக்கிறது. நமது உள்ளத்தின் சமநிலை பாதிக்கப்படும் போது மூளையின் செயல்களும் பாதிக்கப்படுகிறது. அதுவே பல்வேறு உடல்நல பாதிப்புகளுக்கு காரணமாகிறது. அதிலிருந்து நாம் மீண்டு வருவதற்கான சூழல் இல்லாத போது மனஅழுத்தம் என்பது மனநல பாதிப்பாகவும் மாறுகிறது. எனவே நமது முதல் ஆரோக்கியம் என்பது தெளிவான மனநிலையில் தான் உள்ளது. இந்த நிலையில் இருந்து நாம் வேறுபட்டு நிற்கக்கூடாது. அப்படியான சூழல் உருவானாலும் உடனடியாக அதிலிருந்து மீண்டு வருவதற்கான நிலையை உருவாக்க வேண்டும்’’ என்பதும் உளவியல் நிபுணர்கள் வழங்கியுள்ள அறிவுரை.

Related Stories: