நமக்கு ஒரு பெரிய வீடு வேணும், வாசல்ல நாலு கார் நிக்கணும், ஊர்ல நூறு ஏக்கர் நிலமாவது இருக்கணும்…’’ — இது நம் முந்தைய தலைமுறையினரின் ஆகப்பெரும் லட்சியக் கனவாக இருந்தது. ஆனால், இன்றைய ‘20s’ இளைஞர்களிடம் போய் இதைப் பேசினால், “ஏன் பாஸ்… எதுக்கு இவ்ளோ பெரிய வீடு? யாரு இதையெல்லாம் பராமரிக்கிறது?” என்று திருப்பிக் கேட்கிறார்கள்.
இன்றைய தலைமுறையின் (Gen Z மற்றும் Millennials) மாறிவரும் பொருளாதார மற்றும் வாழ்வியல் சிந்தனைகள் புதிய கோணத்தில் உள்ளது. நம்மையெல்லாம் ஆச்சரியத்தில் ஆழ்த்துவதோடு, ‘அடடே… இதுவும் நல்லாத்தான் இருக்கே!’ என்று யோசிக்கவும்வைக்கிறது. சமையலறை இல்லாத ஸ்டுடியோ அபார்ட்மெண்ட்! அன்றைய தலைமுறைக்கு வீடு என்பது கவுரவத்தின் அடையாளம். ஆனால் இன்றைய இளைஞர்களுக்கோ அது வெறும் தங்குமிடம் மட்டுமே. இந்தக் காலத்துப் பசங்க பெரிய வீடெல்லாம் ஆசைப்படறது இல்லை.
ஒரு சிங்கிள் பெட்ரூம் அல்லது ஸ்டுடியோ அபார்ட்மெண்ட் இருந்தா போதும்னு நினைக்கிறாங்க. அதுலயும் முழு சமையலறை கூட அவங்களுக்குத் தேவையில்லை; ஒரு சின்ன பேண்ட்ரி (Pantry) இருந்தா போதும்னு சொல்றாங்க. இதற்குக் காரணம், அவர்களுக்கு சமைக்கத் தெரியாது அல்லது சமைப்பதற்கான நேரமில்லை. ஸ்விக்கியிலயோ சொமாட்டோலயோ ஆர்டர் பண்ணி, வர்ற உணவை பேண்ட்ரியில வச்சு ரீ-ஹீட் பண்ணி சாப்பிட்டுக்கலாம். இதுக்கு எதுக்கு ஒரு பெரிய கிச்சன் என்பது அவர்களின் வாதம்.
* பிரியாணி கணக்கும்… பிராக்டிகல் மைண்ட்செட்டும்
இதன் பின்னணியில் இருக்கும் பொருளாதாரக் கணக்கையும் இந்த தலைமுறையினர் அருமையாக விளக்குகின்றனர். “வீட்ல ரெண்டு பேருக்கு பிரியாணி செய்யணும்னா, மளிகைச் சாமான், கறி, கேஸ்னு எல்லாத்தையும் சேர்த்தா 800 முதல் 1000 ரூபாய் வரை செலவாகுது. ஆனா, அதே பிரியாணியை ஸ்விக்கியில ஆர்டர் பண்ணா 300 ரூபாயில முடிஞ்சிருது. அதுமட்டும் இல்லாம, தினமும் விதவிதமான உணவுகளைத் தேர்ந்தெடுக்கும் ஆப்ஷனும் கிடைக்குது” என்கிறார்கள். இந்த ‘பிராக்டிகல்’ கணக்குதான் இன்றைய தலைமுறையை வழிநடத்துகிறது.
* கார் எதுக்கு… வாடகைக்கு எடுத்துக்கலாம்!
சொந்தமாக கார் வாங்குவது என்பது ஒரு காலத்தில் பெரும் கனவு. ஆனால் இன்றைய தலைமுறை அதை ஒரு கூடுதல் சுமையாகவே பார்க்கிறது. ‘‘ஒரு கார் வாங்கினா அதை யார் மெயின்டெய்ன் பண்றது, யார் கழுவுறது, இன்சூரன்ஸ் யாரு கட்டுறது? அதுக்கு பதிலா, வார வாரம் நமக்குத் தேவையான காரை வாடகைக்கு எடுத்துட்டுப் போயிடலாம். ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு புது கார்ல சுற்றலாம்’’ என்கிறார்கள். அதேபோல், வார இறுதி விடுமுறையைக் கழிக்கச் சொந்தமாகப் பண்ணை வீடு வாங்குவதற்குப் பதிலாக, ஏர்பிஎன்பி (Airbnb) போன்ற தளங்கள் மூலம் தற்காலிகமாகப் புக் செய்து ஜாலியாக இருந்துவிட்டு வந்துவிடுகிறார்கள்.
* 100 ஏக்கர் நிலம்… யாருக்கு வேணும்?
முந்தைய தலைமுறையினர் சொத்துக்களைச் சேர்ப்பதிலேயே தங்கள் வாழ்நாளைக் கழித்தனர். நூறு ஏக்கர், இருநூறு ஏக்கர் நிலங்களை வாங்கிப் போடுவதைப் பெருமையாகக் கருதினர். ஆனால், இன்றைய தலைமுறையோ, “நூறு ஏக்கர் நிலத்தை என்னால நடந்து கூட பார்க்க முடியாது, அப்புறம் எதுக்கு அதை வாங்கிப் போட்டுட்டு மெயின்டெய்ன் பண்ண முடியாம கஷ்டப்படணும்?” என்று யதார்த்தமாக கேள்வி எழுப்புகிறது.
பாரம்பரியமாக நாம் பார்த்து வந்த சொத்துச் சேர்க்கும் மனநிலையை இன்றைய தலைமுறை உடைத்தெறிந்துள்ளது. “பொருட்களைச் சொந்தமாக்கிக் கொள்வதை விட (Ownership), அந்தப் பொருட்களை அனுபவிப்பதே (Experiencing) முக்கியம்” என்ற ‘ஷேரிங் எகனாமி’ (Sharing Economy) நோக்கி உலகம் நகர்கிறது. சுமையற்ற, சுதந்திரமான வாழ்க்கையை விரும்பும் இந்தத் தலைமுறையின் போக்கு, எதிர்கால ரியல் எஸ்டேட் மற்றும் ஆட்டோமொபைல் துறைகளில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது என்பது மட்டும் நிச்சயம். எதிர்காலம் இவர்களுக்கானது.
