உலகளவில் அகதிகளாக 7.80 கோடி மக்கள் உரிமைகள் துறந்து சிரமத்துடன் தொடரும் வாழ்க்கை பயணம்: பரந்த மனதுடன் துணை நிற்க வேண்டும்

பஞ்சம், பட்டினி, வறட்சி, போர் அல்லது வன்முறைகள், இயற்கை சீற்றங்கள் நிகழும்போது, அதை எதிர்கொள்ள முடியாத நிலையில் சொந்த நாட்டை விட்டு இடம் பெயர்ந்து செல்லும் மக்களே அகதிகள் என்று அழைக்கப்படுகின்றனர். ஒரு மனிதன் பிறந்தநாட்டை விட்டு உரிமை துறந்து, உடைமை துறந்து, உறவுகள் துறந்து வேறு நாட்டிற்கு தஞ்சம் புகுவது வேதனையின் உச்சம். பசி, பட்டினி தாங்கமுடியாமல், உயிருக்கு பயந்து அவர்கள் வெளியேறுவது காலத்தின் கொடுமை. இந்தவகையில் உலகம் முழுவதும் 7.80கோடி பேர் அகதிகளாக இருக்கின்றனர்.

ஒவ்வொரு நிமிடமும் சராசரியாக 20 பேர், தங்கள் நாட்டில் வசிக்க முடியாமல் அகதிகளாக வேறொரு நாட்டிற்கு தஞ்சம் அடையச் செல்கின்றனர் என்பது ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள தகவல். இவ்வாறு அகதிகளாக வாழும் மக்களை நினைவில் கொள்வதும், அவர்களுக்கான மேம்பாட்டு பணிகளை செய்ய வேண்டியதும் மிகவும் அவசியம். இதனை கருத்தில் கொண்டு ஆண்டு தோறும் ஜூன் 20ம்தேதி (இன்று) சர்வதேச அகதிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி உலகம் முழுவதும் அகதிகள் நலன் மற்றும் மேம்பாடு சார்ந்த அமைப்புகள் பல்வேறு பணிகளை செய்து வருகிறது. அவர்களின் நிலை மற்றும் தேவைகள் குறித்த பல்வேறு தகவல்களையும் வெளியிட்டு வருகிறது.

இதுகுறித்து அகில இந்திய அகதிகள் மேம்பாடு சார்ந்த பல்வேறு கூட்டமைப்புகளின் நிர்வாகிகள் கூறியதாவது: சொந்த நாட்ைட விட்டும், இருக்கும் இருப்பிடத்தையும், சிறிய சேமிப்பையும் ஒருவர் விட்டுவிட்டு செல்கிறார் என்றால் அவர், அகதி என்று வரையறுக்கப்பட்டுள்ளது. அப்படிப்பட்டவர்களின் கையறு நிலையை நாம் உணரவேண்டும். உயிர் பிழைத்தால் போதும் என்பதை விட, வேறுஎந்த லட்சியமும் இல்லாமல் தொடர்வதே அகதிகளின் பயணம். இந்தவகையில் இந்தியாவில் பல்வேறு காலகட்டங்களில் அகதிகள் வந்துள்ளனர். வங்கதேசம், மியான்மர், திபெத், இலங்கை என்று பல்வேறு நாடுகளில் இருந்து அகதிகளாக வந்த மக்களை ஒன்றிய, மாநில அரசுகள் பாதுகாத்து வருகின்றன.

தமிழகத்தை பொறுத்தவரை அகதிகள் என்றவுடன் நினைவுக்கு வருபவர்கள் இலங்கை தமிழ் மக்கள் தான். பல ஆண்டுகளாக யுத்தத்திற்கு மத்தியில் ரத்தகளத்தில் நின்று கண்ணீர் வடித்த நமது சகோதரர்களின் வாழ்க்கை பயணம் தற்போது அகதிகள் என்ற பெயரில் தமிழ்நிலத்தில் தொடர்கிறது. அதே நேரத்தில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் 4.5 லட்சம் இலங்கை தமிழர்கள், அகதிகளாக உள்ளனர் என்பது இன்றைய தலைமுறை அதிகம் அறியாத ஒன்று. ஒவ்வொரு ஆண்டும் ஒரு இலக்குடன் சர்வதேச அகதிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.

இந்தவகையில் நடப்பாண்டு ‘அகதிகள் எதிர்கொள்ளும் சிரமங்களை கருத்தில் கொள்ள வேண்டும். அவர்களின் சாதனைகள் மற்றும் திறன்களை கௌரவிக்க, நாம் அனைவரும் அவர்களுடன் நிற்க வேண்டும்’’ என்பதாகும். நாடு முழுவதும் பல்வேறு முகாம்களில் நம் சகோதரர்களான சக மனிதர்கள் அகதிகளாக உள்ளனர். இங்கு அவர்களுக்கு பாதுகாப்பு உள்ளது. ஆனால் அவர்களின் உயர்கல்வி, உரிமைகள் போன்றவற்றில் தேக்கநிலையே தென்படுகிறது. அரசு செலவில் அவர்கள் படித்தாலும், உயர்கல்வியை தொடர, பொருளாதார ரீதியில் அவர்களுக்கு ஆதரவு கிடைப்பதில்லை.

இதனால் சிரமங்களில் சிக்கித் தவிப்பது தொடர்கதையாகி வருகிறது. இந்தியாவில் அகதிகள் பாதுகாப்புக்காக தனியாக சட்டங்கள் எதுவும் கிடையாது என்பதே இதற்கான முக்கிய காரணம். பொதுவாக தெற்காசிய நாடுகளில் எங்குமே அகதிகளுக்கான சட்டங்கள் கிடையாது. மனித உரிமைக்கான சர்வதேச மாநாடுகளின் முடிவுகளுக்கு ஏற்ப இந்தியா உள்ளிட்ட நாடுகள், அகதிகளுக்கு வசதிகளை வழங்கி வருகிறது. அதேபோல் ஒரு நாட்டில் இருந்து அகதியாக வருவோரை மொத்தமாக ஒரே பகுதியில் தங்கவைக்கும் வழக்கமும் எங்கும் இல்லை. இப்படி தங்கவைக்கப்பட்டால் அவர்களுக்கான உரிமையை அந்த இடத்தில் கேட்க ஆரம்பித்து விடுவார்கள் என்பதும் இதற்கொரு காரணம். அகதிகளின் பயணம் என்பது தப்பிப்பிழைத்து உயிர்வாழ்வதற்கான ஒரு பயணம் தான். ஆனால் அந்த பயணத்தில் அவர்கள் தன்மானத்துடன் உயிர்த்திருக்க வேண்டும் என்பது தான் மிகவும் முக்கியம். இப்படிப்பட்ட வாழ்வை அவர்களுக்கு அமைத்துக் கொடுப்பதே ஐக்கியநாடுகள் சபையின் நோக்கம். அந்த உயர்ந்த நோக்கம் நிறைவேற, நாம் அனைவரும் பரந்த மனதுடன் ஒத்துழைப்பு நல்க வேண்டும். இவ்வாறு நிர்வாகிகள் கூறினர்.

இந்த நாளின் நோக்கம்
உலகில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களின் பட்டியலில் அகதிகள் உள்ளனர். இதை கருத்தில் கொண்டு அகதிகளின் நிலை தொடர்பான மாநாடு 1951ம் ஆண்டு ஜெனீவாவில் நடந்தது. இந்தமாநாட்டின் 50வது ஆண்டு நினைவாக 2001ம் ஆண்டு ஜூன் 20ம்தேதி முதல் உலக அகதிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளானது, இதற்கு முன்பு ஆப்பிரிக்க அகதிகள் தினமாக அங்கீகரிக்கப்பட்டது. பின்னர் 2000ம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை அதிகாரப்பூர்வமாக அகதிகளுக்கான சர்வதேச தினமாக அறிவித்தது. இந்த வகையில் நடப்பாண்டும் சர்வதேச அகதிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. அகதிகள் என்ற பெயரில் இடம் பெயரும் நமது சக உயிர்களை அரவணைத்து வாழவைக்க வேண்டும். அதோடு அவர்களுக்கான மனித உரிமைகள் அனைத்தையும் வழங்கிட வேண்டும் என்பதே இந்தநாளின் நோக்கமாகும்.

முன்னோடியாக திகழும் தமிழ்நாடு
‘‘அகதிகள் என்றாலே தமிழ்நாட்டில் நமக்கு நினைவுக்கு வருபவர்கள் இலங்கையில் இருந்து வந்த சகோதரர்கள் தான். தமிழகத்தில் 59,000 இலங்கைத்தமிழர்கள் அகதிகளாக உள்ளனர். இவர்களில் 29ஆயிரம் பேர், பல்வேறு இடங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தமிழக முகாம்களில் அடிப்படை, சுகாதார வசதிகளுடன் வீடுகள், அதிகமதிப்பெண் பெறும் அகதிகளின் குழந்தைகளுக்கு அரசு சார்பில் உயர்கல்வி, விடுதி கட்டணம், முகாம்வாழ் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு, பெண்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இந்த வகையில் அகதிகள் முன்னேற்றத்தில் பிறமாநிலங்களுக்கு முன்னோடியாக திகழ்கிறது தமிழ்நாடு’’ என்பதும் அகதிகள் நலன்சார்ந்த அமைப்புகளின் பெருமிதம்.

Related Stories: