திருவொற்றியூரில் 7 மணி நேரம் மின்தடை; பொதுமக்கள் திடீர் சாலை மறியல்: மக்களின் குரல் கேட்கிறதா சிஎம் சார் என கோஷமிட்டதால் பரபரப்பு

 

திருவொற்றியூர்: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக பகல், இரவு நேரங்களில் அடிக்கடி மின் தடை ஏற்படுவதால் பொதுமக்கள், குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள் என அனைவரும் சிரமப்பட்டு வருகின்றனர். குறிப்பாக மாணவ, மாணவிகள் படிக்க முடியாமல் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். பல மணி நேரம் மின் தடை தொடர்வதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியல் செய்வதும், மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்வதும் தொடர்கதையாக உள்ளது.இந்த நிலையில், திருவொற்றியூர் தொகுதிக்கு உட்பட்ட பீர் பயில்வான் தர்கா மற்றும் தியாகராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு தொடர்ந்து 7 மணி நேரம் மின்தடை ஏற்பட்டதால், அப்பகுதி மக்கள் புழுக்கத்தால் தூங்க முடியாமல் கடும் அவதிக்குள்ளாகினர்.

இதையடுத்து திருவொற்றியூர் மின்வாரிய அலுவலகத்திற்கு சென்ற பொதுமக்கள், ஏன் மின் துண்டிப்பு சரிசெய்யப்படவில்லை என கேட்டு அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால், அவர்கள் முறையான பதிலளிக்காததால் எண்ணூர் விரைவு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது, தொகுதி எம்எல்ஏ, வாக்களித்த மக்கள் நாங்கள் சாலையில் இருக்கிறோம், எம்எல்ஏ எங்கே இருக்கிறார். மின்தடையால் அவதிப்படுகிறோம், மக்களின் குரல் கேட்கிறதா சிஎம் சார்… என கோஷங்களை எழுப்பி, 1 மணி நேரம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து திருவொற்றியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, மின் துண்டிப்பை சரி செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதைதொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதுகுறித்து மறியலில் ஈடுபட்ட மக்கள் கூறுகையில், ‘மின் கட்டணத்தை செலுத்தவில்லை என்றால் உடனே நடவடிக்கை எடுக்கிறார்கள். மின் கட்டணம் செலுத்திவிட்டு சாலையில் இருக்கவேண்டுமா, எங்கள் பிரச்னையை சரி செய்ய யாரும் முன்வருவதில்லை. இதேநிலை நீடித்தால் மின் கட்டணம் செலுத்தமாட்டோம்,’ என்றனர். மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், ‘பிரதான மின் வயரில் பழுது ஏற்பட்டதால் மின் தடை ஏற்பட்டது. அதை சரி செய்யவும், மாற்று லைன் மூலம் மின்சாரம் விநியோகிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்,’ என்றனர்.

Related Stories: