குருக்ராம்: குருக்ராமில் வெளிநாட்டு ரவுடி கும்பலை சேர்ந்த நான்கு பேரை போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி சுட்டுக்கொன்றனர். அரியானா மாநிலம் குருக்ராம் சுஷாந்த் லோக் பகுதியில், எஸ்.ஜி.டி., பல்கலைக்கழக நிறுவனரின் மகனான பிரபல தொழிலதிபர் ஒருவரை குறிவைத்து, வெளிநாட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தீபக் நந்தல் ரவுடி கும்பல் பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளது. இந்த நிலையில், ஆயுதங்களுடன் சிலர் காரில் சுற்றித் திரிவதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி குற்றப்பிரிவு போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அதற்குள் அந்த கும்பல் தொழிலதிபரின் வீட்டுக்குள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தியது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அவர்களை சரணடையுமாறு எச்சரித்தபோது, அக்கும்பல் போலீசார் மீது சரமாரியாக சுட்டது. இதனால் போலீசார் தற்காப்பிற்காக நடத்திய அதிரடி என்கவுண்டரில் அக்கும்பலைச் சேர்ந்த நான்கு பேர் சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்டனர். இதுகுறித்து சதர் உதவி கமிஷனர் தரம்பிர் சிங் கூறுகையில், ‘வெளிநாட்டில் இருக்கும் கும்பலிடம் இருந்து மிரட்டல் மற்றும் பணம் பறிப்பு போன் அழைப்புகளைப் பெற்று வந்த முக்கிய தொழிலதிபரின் வீட்டிற்குள் இந்த சமூக விரோதிகள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
விரைந்து சென்று அவர்களை சரணடையுமாறு கூறினர். ஆனால் அவர்கள் போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனால் போலீசார் தற்காப்பிற்காக திருப்பிச் சுட்டதில் 4 பேர் இறந்துவிட்டனர்; ஒருவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நடவடிக்கையின் போது 3 போலீசார் காயமடைந்து தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்’ என்றார். இந்த என்கவுன்டர் நடந்த சுஷாந்த் லோக் பகுதியில் தடயவியல் நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளதோடு, சட்டவிரோத ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
